ஆட்சியாளர்களின் பொறுப்பபற்ற நடவடிக்கைகளும் துஸ்பிரயோகங்களும் எல்லை கடந்த நிலைக்குச் சென்றுள்ளன. இதற்கு விலையாக நாட்டு மக்கள் தமது உயிர்களை அநியாயமாக பறிகொடுக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல. இது எமது ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்றவர்களின் கவனயீனங்களாலும், துஸ்பிரயோகங்களினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனர்த்தமாகும்.
பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்துவந்த மீத்தொட்டமுல்லை பகுதியில் 2009 இல் குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபை தொடங்கியது.
அன்று முதல் இதை நிறுத்த வேண்டும் என மக்கள் அரசாங்கத்தைக் கோரியும் போராடியும் வந்திருக்கிறார்கள. அவை எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை.
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு சிறந்த வழிகளில் முகாமைத்துவம் செய்வதற்கான திட்டங்கள் பல நிபுணர்களால் முன்மொழியப்பட்டும் வந்தன.
வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் இதற்கான சில தீர்வுத் திட்டங்களை கொண்டும் வந்தன. அவை எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.
நாளாந்தம் கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை கொண்டு போய் மீத்தொட்டமுல்லை பகுதியில் கொட்டுவதனை மாத்திரமே கொழும்பு மாநகர சபை செய்து வந்தது. இதற்காக வழங்கப்பட்ட கொந்தராத்துக்களில் பெருந்தொகை ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
600 மில்லியனுக்கு கோரப்பட்ட கொந்தராத்தினை 800 மில்லியனுக்கு வழங்கி ஆட்சியாளர்கள் மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் கூட கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் இப்பகுதி மக்களை அழைத்துப் பேசி இதனை உடனடியாகத் தீர்த்து வைப்போம் என வாக்குறுதியும் வழங்கியுள்ளது.
ஆனால் இது வரை எதுவும் நடை பெறவில்லை. மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்ற பல சம்பவங்களில் இதுவும் ஒன்றாக மாறியிருக்கின்றது.
பல ஆடம்பரமான கவர்ச்சிகரமான வேலைத் திட்டங்களுக்காக கொழும்பு நகரில் பல நூறு கோடிகளை செலவு செய்கின்ற இந்த ஆட்சியாளர்கள் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறு முயற்சியைக்கூட எடுக்கவில்லை. மாறாக தமது அரசியல் இலாபத்திற்கும் பொருளாதார இலாபத்திற்குமாகவே அதனைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
தமது பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வரிப்பணத்தை உறுஞ்சுகின்ற ஆட்சியாளர்களக்கு தமது உயிர்களையும் பலிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலுள்ள பல நகரங்களில் இதைவிட அதிகமான மக்கள் செறிந்து வாழும் இடங்களில் கூட திண்மக்கழிவு முகாமைத்துவம் மிகக்கிரமமாகக் கையாளப்படுகின்றது.
உதாரணமாக 24 மில்லியன் சனத் தொகையைக் கொண்ட அவுஸ்த்திரேலியாவில் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 45 மில்லியன் தொண் திண்மக்கழிவுகள் உருவாகின்றன. ஆனால் அவை அனைத்துமே குறிப்பிட்ட அந்த ஒரு வருடத்திற்குள் மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு விடுகின்றன.
21 மில்லியன் தொகையைக் கொண்ட எமது நாட்டில் வருடமொன்றக்கு 2.3மில்லியன் தொண் அளவிலான திண்மக் கழிவுகள் உருவாகின்றன.
அவுஸ்திரேலியாவோடு ஒப்பிடுகின்ற போது நம் நாட்டில் மிகக் குறைந்த அளவே குப்பைகள் உருவாகின்றன. இதனைக்கூட கையாள முடியாத நிலையில்தான் நமது ஆட்சியாளர்கள் இந்த மனித அழிவுகளுக்கு வழிகோலியிருக்கிறார்கள்.
இத்தனை தொழில் நுட்பங்களும் அறிவியல் வசதிகளும் இருக்கின்ற நிலையிலும் கூட இத்தனை வருட காலமாக குப்பைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுகின்ற ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.
இந்த உயிர் இழப்புக்களுக்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான போதுமான நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். அத்தோடு, குப்பைப் பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வனர்த்தில் பாதிக்கப்பட்ட, தமது உறவுகளை இழந்த மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
இம்மக்களுக்கு நீதி நிவாரணம் கிடைப்பதற்காக எம்மால் முடிந்த சகல உதவிகளையும் செய்வதற்கு நாம் என்றும் தயாராக இருக்கிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.