அவுஸ்ரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா?

தொல்லியல் மற்றும் மானுடவியல் துறையினர் குறிக்கும் வரலாற்றுக் காலம் என்பது, பொதுவாக இறுதியான உறைபனிக் காலத்தின் (last glacial period) முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள காலம். இக்காலத்தில் இருந்து நமக்கு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக்கிட்டு, மனித வரலாற்றைக் கட்டமைக்க உதவும் காலக்குறிப்புத் தடயங்களை ஏதோ ஒருவகையில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிவதற்கு,  தங்கள் வாழ்வின் எச்சங்களாக அவர்கள் விட்டுச் சென்றவையாக அகழாய்வின் போது கிடைக்கும் சான்றுகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating); வெப்பஒளிர்வு காலக்கணிப்பு (thermoluminescence dating) போன்ற அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி காலத்தைக் கணிக்க வேண்டியுள்ளது. தொல்லியல்  தடயங்களையும், ஆய்வின் முடிவாகக் கிடைக்கும் காலத்தையும் இணைத்து அவர்களது வாழக்கைமுறையைக் குறித்து நாம் அறிய முயல்கிறோம்.

மனித வரலாறு அறிவதில் மரபணுவியலின் பங்கு:

Close View of a DNA Strand

தொல்லியல் அகழாய்வுத் துறையினர் போலவே உயிரியல் ஆய்வாளர்களும் மரபணு ஆய்வு போன்ற அறிவியல் ஆய்வுகள் வழியாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினர் குறித்த தகவல்களை அறியத் தருகிறார்கள்.  இத்தகைய மரபணு ஆய்வுகளில், ஆணின் Y – குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுகிறது. பெண்கள் வழியில் மூதாதையர் குறித்து அறிய ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mitochondrial DNA/mtDNA) ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

மனிதக்குலப் பரவல், மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்படுகிறது.  செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்கருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பிரதிகள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில் அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான ஆராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

Siragu austrelia6

ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டது. அந்தத் தாய்க்குக் கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து மட்டுமே  வந்தது. இவ்வாறு  ஆண் பெண் இருவரும் தாய் வழியாக மட்டுமே பெறுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.  இனப்பெருக்கக் காலத்தில் தந்தை  வழியின்  மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.  உள்ள விந்துவின்  பகுதி இனப்பெருக்கத்தில் பங்கேற்பதில்லை. விந்து முட்டையுடன் சேரும் பொழுது அப்பகுதி கழற்றிவிடப்படுகிறது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக  அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் தாய்வழி  கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது தாய்வழிப் பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப்படுத்தப்படுகிறது.

காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப்படுகிறது. மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.

இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப்பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப்பட்டுள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ளத் தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது.

ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் மரபணு ஆய்வு முடிவுகள்:

தோற்றத்தில் தென்னிந்திய மக்களை ஒத்திருக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும், அவர்களது பண்பாடு மொழிக்கூறுகளுடன் தமிழருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. தென்னிந்தியப் பழங்குடியினருக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் உள்ள தோற்ற ஒற்றுமையை முதலில் ஆவணப்படுத்தியவர் “ஹக்ஸ்லீ” (Huxley, T.H.; 1870). இக்கருத்திற்குச் சான்று தரும் வகையில் சில ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன  (Irina Pugach, et.al., 2013  &  Alan J. Redd, et. al., 1999 & 2002).

ஆனால் சென்ற மாதம் வெளியான ஆய்வின் முடிவு (Ray Tobler, Alan Cooper et al., 2017) இக்கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.  இந்த ஆய்வு ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’வினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.

Siragu austrelia7

ஆஸ்திரேலியாவின் அடிலாய்ட் பல்கலைக் கழகத்தின் (University of Adelaide) உயிரியல் ஆய்வாளர் “ரே டாப்ளர்”,  “ஆலன் கூப்பர்” (Ray Tobler, Alan Cooper et al., 2017) குழுவினர் ,  ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்த 111 பழங்குடியினரின் முடிகளைச் சேகரித்து, அவற்றின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை ஆய்வு செய்து,   தாய்வழி மரபணுக்களின் அடிப்படையில்  அவர்களின்  மைட்டோகாண்டிரியல் ஹாப்லோ பிரிவுகளை ஆராய்ந்தனர்.  மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ.யின்  உதவி கொண்டு  ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர் குடியேற்றத்திற்கு முன்னர் வாழ்ந்த ஆஸ்திரேலியப் பழங்குடிப் பிரிவினர்களையும் அவர்கள் இருப்பிடத்தையும் ஆராய முற்பட்டனர்.  இந்த ஆய்வுக்கு இவர்களுக்கு உதவியது  அடிலாய்ட் பல்கலைக் கழகத்தின் பழங்குடி ஆய்வு மையம் தொலை நோக்கோடு,  1920 முதல்  1970க்கு இடைப்பட்ட காலத்தில் 5,000  பழங்குடியினரிடம் அனுமதி பெற்று அவர்களது முடி மாதிரிகளையும், அவர்கள் தங்களைப் பற்றிக் கூறிய பற்பல வாழ்வுமுறை, பண்பாடு, கலை, இலக்கியம், மொழி, சடங்கு முறைகள், நாடோடிக் கதைகள்,  பாடல்கள், மூதாதையர் குறித்த செய்திகள் ஆகிய பலவற்றைக்  குறித்து விரிவாகக் கொடுத்த தகவல்களையெல்லாம் மிக்க சிரத்தையுடன் சேமித்து வைத்த தரவுகள் (பார்க்க:  Aboriginal Heritage Project – The University of Adelaide- https://youtu.be/R6LzbKszKhQ).

இந்த ஆய்வு முடிவின் வழியாகப் பெறப்பட்ட தகவல்: ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மனித இனத்தினரில் சிலர் ‘ஒரே குழுவாக’ நிலம் வழியாக பப்புவா நியூ கினியா (Papua New Guinea) தீவுவரை சென்று,    50,000 ஆண்டுகளுக்கு முன்னர்,  பப்புவா நியூகினியாவுடன் நிலத்தொடர்பு கொண்டிருந்த ஆஸ்திரேலியா கண்டத்திற்கு சென்றுள்ளார்கள்.  பப்புவா நியூகினியாவுடன் நிலத்தொடர்பு கொண்டிருந்த  ஒருங்கிணைந்த ஆஸ்திரேலியா நிலப்பரப்பு “சாஹுல்” (Sahul) என்று அறியப்படுகிறது (இதனை, பிற நிலத்துடன் இணைந்திருந்த  இந்திய நிலப்பகுதி  கோண்ட்வானா அல்லது லெமூரியா பெருநிலம் என அழைக்கப்படுவதுடன் ஒப்பிடலாம்). பிற்காலத்தில்,  இறுதியான உறைபனிக் காலத்திற்கும் பிறகு, கடல்நீர் மட்டம் உயர்ந்த காலத்திற்குப்  பிறகு  பப்புவா நியூ கினியா பகுதியில் வாழ்ந்த பிரிவினருடன் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் உறவு கொண்டதாக மரபணு ஆய்வு முடிவுகள் காட்டவில்லை.

50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வடபகுதி வழி உள்நுழைந்தவர்கள் கிழக்குக் கடற்கரை ஓரமாகவும், மேற்குக் கடற்கரை ஓரமாகவும் இரு பிரிவாகப் பிரிந்து   தென் பகுதி, டாஸ்மேனியா (Tasmania) வரை சென்றுள்ளனர்.  இந்தப் பரவல் மிக விரைவாக 1,500 ஆண்டுகளில் இருந்து 2,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது.  தட்ப வெட்பநிலை காரணமாக, ஆஸ்திரேலியாவின்  மையப்பகுதியில் உள்ள பாலைநிலத்தினை அவர்கள் தவிர்த்துள்ளனர்.  P, S, மற்றும்  M42a ஹாப்லோ பிரிவினர் கிழக்குப் பகுதிகளிலும்,  O மற்றும்  R ஹாப்லோ பிரிவினர் மேற்குப் பகுதிகளிலும், O மற்றும்  S ஹாப்லோ பிரிவினர்  தெற்குப் பகுதியிலும் குடியேறியது  தெரிய வருகிறது (பார்க்க: https://natgeoeducationblog.files.wordpress.com/2017/03/nature21416-f3.jpg).  இவ்வாறு விரைவில் பரவி, தேர்வு செய்த இடங்களில் குடியமர்ந்த பிறகு அவர்கள் மேற்கொண்டு இடம் பெயர முயலவில்லை.  மிகவும் மோசமான தட்பவெட்ப நிலை மாற்றங்களிலும் இருந்த இடத்திலேயே இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்துள்ளனர்.  இதற்குக் காரணம் அவர்கள் விவசாயம் செய்யும் முறைக்கு மாறாமல்,  வேட்டையாடிச் சேகரித்து (hunter-gatherers) வாழும் வாழ்க்கை முறையைத் தொடர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

உழவுத் தொழிலை மேற்கொண்டால் அதிக உணவு உற்பத்தியும், அதனால் மக்கட்தொகைப் பெருக்கமும், பின் அதற்காக உணவுத் தேவைக்கெனச்  சேகரிப்பதும், பிறர் அதனைக் கவர முற்படுவதும், அதனைத் தொடர்ந்து பண்பாட்டு மோதல்களும், போர்களும் எனத் தொடர்வது  உலக வரலாறு.  ஆஸ்திரேலியப் பழங்குடியினர் வேட்டையாடிச் சேகரித்து வாழ்வதையே தொடர்ந்ததால் அளவுக்கு மீறிய மக்கட்தொகைப் பெருக்கமோ, அதைத் தொடர்ந்து போர் போன்ற விளைவுகளோ இல்லாது அமைதியான வாழ்க்கையை  வாழ்ந்து வந்தனர்.  குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒரு மில்லியன் அளவு பழங்குடியினர் ஆஸ்திரேலியா முழுமையிலும் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இதனைக்  கிறிஸ்து வாழ்ந்த 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த காலகட்டத்தில், பண்டைய  இத்தாலியில் அந்நாட்டின் ரோம் நகரில் மட்டுமே அதன் மக்கட்தொகை ஒரு மில்லியனை எட்டியிருந்தது என்பதுடன் ஒப்பிட்டால் பழங்குடியினரின் நாடளாவிய மக்கட்தொகையின் குறைந்த அளவுநிலையைப்  புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நுழைந்த ஒரு குழு, பெருகிப் பரவி புது குடியிருப்புகளைத் தேர்வு செய்து கொண்ட பின்னர், பிற பழங்குடி மக்களுடன் எந்த இனக் கலப்பும் இருந்ததில்லை என்றும் ஒவ்வொரு குழுவும் தங்களுக்குரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழி மற்றும் வாழ்க்கைமுறைகளுடன் 48,000 ஆண்டுகள் தனிப்பட்ட வகையில் வாழ்ந்துள்ளனர் என்றும் தெரிகிறது (notable variations found in social, cultural and linguistic customs among the various Aboriginals). இவர்கள் இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதும் (தமிழர், தெலுங்கர் என நாம்  குறிப்பிடுவது போல) அவர்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில்தான். ஐரோப்பியர் வருகையின் பொழுது இருந்த 250 க்கும் மேற்பட்ட மொழிகளில் தற்பொழுது பாதிக்கும் மேல் மறைந்துவிட்டன. இருப்பவற்றுள்ளும் 13 மொழிகள் மட்டுமே அழிவை நோக்கிச் செல்லாதவையாகவும் உள்ளன. இனவேறுபாடுகள் இவர்களிடையே இருந்தாலும்  ஆஸ்திரேலியப் பழங்குடியினர்  யாவருமே ஐரோப்பியர்களால்  பொதுவாக  கறுப்பர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

இறுதியான உறைபனிக் காலத்தின் முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல்நீர்மட்டம் உயர்ந்து ஆஸ்திரேலியா பிற நிலப்பரப்புகளுடன் கொண்ட தொடர்பு விட்டுப் போனது.  அதன் பிறகு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் வரை இருந்த  இடைப்பட்ட காலத்தில் எவரும் ஆஸ்திரேலியாவிற்கு வந்ததாகவோ, வந்திருந்தால் பழங்குடியினருடன் இனக்கலப்பு கொண்டதாகவோ மரபணு ஆய்வு காட்டவில்லை.  அதாவது முன்னர் கொண்ட கருத்துப்படி,  அலை அலையாகத் தொடர்ந்து குழுவினர்கள் இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு வரவுமில்லை. முதலில்   50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களுக்குப் பிறகு, ஐரோப்பியர் குடியேறிய தற்காலம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில்  யாரும் வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழவுமில்லை,  அங்குள்ள மக்களுடன் யாரும் இனக்கலப்பும் செய்யவில்லை என்று காட்டுகிறது ஆய்வின் முடிவு.

Siragu austrelia1

இந்த தாய்வழிமரபணு  ஆய்வின் முடிவும், தென்பாலைவனத்தின் உட்புறப் பகுதியான  “வராட்டி பாறை  தங்குமிடம்” (Warratyi rock shelter) என்ற பகுதியில் கிடைத்த தொல்லியல் தடயங்களின் மூலம்,   49,000 ஆண்டுகளுக்கு முன்னர்  இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்ட  ஆய்வின் முடிவுடன் (Giles Hamm,et.al., 2016) காலக்கணிப்பில்  ஒத்துவருவது ஆய்வாளர்களுக்கு மேலும் நம்பிக்கை தருவதாக உள்ளது. சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் ஆஸ்திரேலியாவின் தென்முனை வரை பரவியது இதனால் உறுதிப் படுத்தப்படுகிறது. அதாவது, இந்த  மரபணு ஆய்வுத்  தரவுகள் முன்னர் தொல்லியல் ஆய்வுத் தரவுகள் காட்டியதை  உறுதிப்படுத்தியுள்ளதுடன்,  பழங்குடியினர் யாவருமே ஒரே குழுவினராக  50,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியவர்கள் என்ற மேலதிகத் தகவலையும் கொடுத்துள்ளது.

Bergstrom_GraphicalAbstract

இந்த ஆய்வின் முடிவுடன்,  மற்றொரு ஆய்வும்,  Y குரோமோசோம் ஆய்வின் அடிப்படையில் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் தென்னிந்தியர் பிரிவில் இருந்து 54,000 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்துவிட்டார்கள், கடந்த 5,000 ஆண்டுகளில் தென்னிந்தியருக்கு ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன் மரபு வழித் தொடர்பு இல்லை (We find no evidence for Holocene male gene flow to Australia from South Asia; figure: http://www.cell.com/cms/attachment/2085779786/2073928332/fx1.jpg) என்று  குறிப்பிடுவதையும் இங்கு  ஒப்பிட்டு நோக்கலாம் (Anders Bergström, et al., 2016).

ஆய்வின் முடிவு சுருக்கமாக; ஒரே குழுவினராக ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறிய மக்கள் மிக விரைவில் 2,000 ஆண்டுகளுக்குள் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகள் வழியாகப் பரவி  ஆஸ்திரேலியாவின் தென் பகுதியை அடைந்தனர். அவ்வாறு பல பகுதிகளில் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள் பிறகு தொடர்ந்து வந்த காலங்களில், மோசமான தட்பவெட்ப நிலையிலும், பல பண்பாட்டு மாறுதல் கொண்ட சூழ்நிலையை எதிர்கொண்டாலும்  தொடர்ந்து, மாறுதல் இன்றி  தாங்கள் குடியேறிய பகுதிகளிலேயே பழங்குடியினர்  தனித்தனியாகக் கலப்பின்றி  வசிக்கத்தொடங்கினர்.

சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகளின் முடிவுகளின் முக்கியத்துவம்:

இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் தமிழர்கள் அறிய  வேண்டியது,  மொழி பண்பாடு ஆகியவற்றில் வளர்ச்சியடைந்த வரலாற்றுக் காலமான கடந்த 10,000 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கும் தமிழருக்கும் மரபணுத்  தொடர்புகள் இருப்பதைக்  காட்ட இயலவில்லை.  தற்பொழுது அங்கு வசிக்கும் பழங்குடியினர் 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே அங்குக் குடியேறிவிட்டனர்.  அதன் பின்னர் அவர்களுக்குள்ளேயே இனக்கலப்பும் இல்லை. அவ்வாறானால்  ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன்   பண்டையத் தமிழரின் பண்பாட்டு மொழிக் கூறுகளுக்கான தொடர்பு இருக்கிறது என்பதை எவ்வாறு காட்ட இயலும்?  முன்னர் சில ஆய்வுகள் கூறியபடி,   5,000 (ஹோலோசீன் – Holocene காலத்தில்  4,230) ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து வந்த (தமிழர்) குடியேற்றம் செய்தனர்  (Irina Pugach, et.al., 2013  &  Alan J. Redd, et. al., 1999 & 2002) என்பதற்கு சமீபத்திய  தாய்வழிமரபணு மற்றும் தந்தைவழி மரபணு ஆய்வுகளின்படியும் சான்றுகள் இல்லை.

எனவே தமிழகத்தின் “வளரி” கருவிக்கும், ஆஸ்திரேலிய “பூமராங்” கருவிக்கும் காட்டப்பட்டு வந்த தொடர்பு, தமிழ் மொழித் தொடர்பும்  கேள்விக்குள்ளாகிறது.  கருவி உருவாக்கும் தொழில் நுட்பம், மொழி வளர்ச்சி எல்லாம் கடந்த 5,000 ஆண்டுகளுக்குரியது.  கடந்த 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தொடங்கி இந்தியா வழியாகவோ; அல்லது கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் துவங்கி தரை வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்த மாந்தர்களின் காலமோ கற்காலம். இத்தகைய மொழி, கருவிப் பயன்பாட்டுத் தொடர்புகளைக் காட்டவியலாத காலம்.

மாறாக, நாகரிகம் அடைந்த காலத்தில், தமிழர் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கிய வரலாற்றுக் காலமான பிற்காலத்தில் அவர்கள் அங்குச் சென்று வந்திருப்பதாகக் கருதினாலோ,  அதன் விளைவாக  மொழியியல், மாந்தரியல் ஆய்வுகள் வழி தமிழரின் தாக்கம் ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடம் இருக்கிறதா என ஆராய விரும்பினாலோ அடிலாய்ட் பல்கலைக் கழகத்தின் பழங்குடியினர் பண்பாட்டு மையம் (The Aboriginal Heritage Project of Adelaide’s Australian Centre for Ancient DNA/ACAD) சேமித்து வைத்துள்ள தகவல்கள் ஆய்வு செய்ய விரும்புவோருக்கு ஒருவகையில் உதவக்கூடும்.

Siragu austrelia8

கவனத்தில் கொள்ள வேண்டியவை, ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்போர் ஓரிரு குழுவினர் அல்லர். தற்காலத்திலேயே பெரிய குழுக்களான  குறைந்தது 20 க்கும் அதிகமான பழங்குடி குழுக்கள்  அறியப்படுகிறார்கள். உலகின் பிற பகுதி மக்களைப் போன்றே அவர்களும்  காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவி வருவதால் அவர்களது பண்டைய  மொழி, பண்பாடு வாழ்க்கைமுறைகள் மறைந்து வருகின்றன. இதனால் தகவல் சேகரிப்பது பெரிய சவாலாக அமையும்.

___________________________________________________________

குறிப்பு: ஆயிரம் ஆண்டுகள் என்பதை  ka/kya என்றும், பத்தாயிரம் ஆண்டுகள் என்பதை  kyr என்றும் அறிவியல் கட்டுரைகளில் குறிப்பிடப்படுவது வழக்கம். எனவே “50 ka” என்பது ஐம்பதாயிரம் / 50,000 ஆண்டுகள், சான்றுகளாகக் கொடுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றில் இந்த அளவுக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்தக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.

ஆய்வுக்கட்டுரைகள்:

[1] Aboriginal mitogenomes reveal 50,000 years of regionalism in Australia; Ray Tobler, et al., Nature (2017) doi:10.1038/nature21416, https://www.nature.com/nature/journal/vaop/ncurrent/full/nature21416.html

[2] Cultural innovation and megafauna interaction in the early settlement of arid Australia;  Giles Hamm,et.al., Nature 539, 280–283 (10 November 2016) doi:10.1038/nature20125;  http://www.nature.com/nature/journal/v539/n7628/full/nature20125.html

[3] Genome-wide data substantiate Holocene gene flow from India to Australia; Irina Pugach, et.al., Proc Natl Acad Sci U S Av.110(5); (2013 Jan 29); doi:  10.1073/pnas.1211927110; https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3562786/

[4] Deep Roots for Aboriginal Australian Y Chromosomes; Anders Bergström, et al., Current Biology, Volume 26, Issue 6, 21 March 2016, Pages 809–813; http://www.cell.com/current-biology/abstract/S0960-9822(16)00078-6

[5] Gene Flow from the Indian Subcontinent to Australia Evidence from the Y Chromosome; Alan J. Redd, et. al., Curr. Biol., 12 (2002), pp. 673–677; http://www.cell.com/current-biology/fulltext/S0960-9822(02)00789-3

[6] Peopling of Sahul: mtDNA Variation in Aboriginal Australian and Papua New Guinean Populations; Alan J. Redd et. al., Am. J. Hum. Genet. 1999; 65: 808–828; http://www.cell.com/ajhg/fulltext/S0002-9297(07)62334-9

[7] On the geographical distribution of the chief modifications of mankind; Huxley, T.H.;Ethnol. Soc. J. (Lond.). 1870; 2: 404–412

படங்கள்:

https://natgeoeducationblog.files.wordpress.com/2017/03/nature21416-f3.jpg

https://natgeoeducationblog.files.wordpress.com/2016/03/1-s2-0-s0960982216000786-fx1.jpg