தமிழர்களுக்கான உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
புங்குடுதீவில் நேற்றைய தினம் நடைபெற்ற அம்பலவாணர் கலையரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்சியாளர்களை நல்லாட்சி என்று நாங்களே கூறி மக்களிடம் தவ றான அபிப்பிராயத்தை நாங்களே உருவாக்கியுள்ளோம். எங்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
பிரச்சினைகள் இந்த மண்ணில் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யாரும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். ஆனால் அரசாங்கம் இதனை நினைக்கவில்லை.
எங்களுக்கு உதவி செய்து எங்கள் உரிமைகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் என எண்ணுகின்றது. எங்களுக்கான தேவைகளை நாங்களே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் போது மீண்டும் கடந்த கால சம்பவங்கள் நிகழலாம்.
மண்ணின் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகையினில் இந்த மண்ணில் எங்களுக்கான உரிமைகள் அப்போதும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை சந்திக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாமெனவும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal