நாசாவின் ராக்கெட் லான்ச் நிகழ்வு முதல் முறையாக 360 கோணத்தில் நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நேரலையை நேயர்கள் யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆர்பிட்டல் ATK மற்றும் யுனைட்டெட் லான்ச் அலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 360 கோணத்திலான வீடியோவினை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன. அதன்படி ராக்கெட் லான்ச் நிகழ்வினை ஏப்ரல் 19-ந்தேதி நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.
ராக்கெட் விண்வெளியில் ஏவுவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே வீடியோ நேரலை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் நாசா டெலிவிஷன் சேனலில் நேயர்கள் நேரலை வீடியோவினை பார்த்து ரசிக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
ஆர்பிட்டலின் ATK சிக்ணஸ் விண்கலத்தை சுமந்து செல்லும் அட்லஸ் V ராக்கெட் 3,447 கிலோ எடை கொண்ட அறிவியல் ஆய்வு, குழுவினருக்கான விநியோக பொருட்கள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்கிறது.
வீடியோவினை 360 கோணத்தில் பார்க்க கம்ப்யூட்டர் மவுசை கிளிக் செய்தபடி நான்கு திசைகளிலும் நகர்த்த வேண்டும். இந்த தொழில்நுட்பத்தில் பார்க்கும் போது நாமும் அங்கு இருந்து நேரலையில் பார்ப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.
எனினும் அனைத்து பிரவுசர்களும் 360 கோணத்திலான வீடியோக்களை சப்போர்ட் செய்வதில்லை. யூடியூப் தளத்தில் 360 டிகிரி வீடியோக்களை கம்ப்யூட்டரில் கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஒபேரா உள்ளிட்ட பிரவுசர்களில் பார்க்க முடியும். இதுதவிர யூடியூப் செயலி கொண்டு ஸ்மார்ட்போன்களிலும் பார்க்க முடியும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை வைத்திருப்போர் நேரலை வீடியோக்களை ஏவுதளத்தில் இருந்து பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.