உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் தாமும் உடன்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) இரவு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது புதிய அரசமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தாமும் அதே நிலைப்பாட்டிலேயே காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எந்த வகையான அதிகாரங்கள் இருக்க வேண்டும், மாகாணங்களுக்கு எந்த வகையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படாத போதிலும், அது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.