போர் விமான பைலட் ஒருவரின் வாழ்க்கையில் காதல் புயல் அடித்தால்..? அதுதான் ‘காற்று வெளியிடை’.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்திய ராணுவப் போர் விமானியாகப் பணியாற்றுபவர் வருண் (கார்த்தி). அதே ஊரில் மருத்துவராகப் பணியில் சேருகிறார் லீலா (அதிதி ராவ்). ஒரு விபத்தில், வருணுக்குக் காயம் ஏற்பட, லீலா சிகிச்சை அளிக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. வரு ணின் ஆணாதிக்க, முரட்டுப் போக்கு லீலாவைக் கசப்படையச் செய்தாலும் முரண்பாடுகளுக்கு இடையில் காதல் வளர்கிறது. முரண்பாடு முற்றும்போது பிரிவு ஏற்படுகிறது. பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் கதை.
வெள்ளிப் பனிமலை, துப்பாக்கிச் சத்தம், காற்றில் சாகசம் செய்யும் போர் விமானங்கள் என்று விரியும் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அந்த நிமிர்வு, அடுத்தடுத்த காட்சிகளில் சரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பின்னணி இசை, மனதில் ரீங்கரிக்கும் பாடல்கள், பனிமலையின் குளுமையையும் புத்துணர்வையும் அள்ளித்தரும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு எனத் திரைக்கதைக்குப் பலமூட்டும் அனைத்து விஷயங்களும் இருந்தாலும், திரைக்கதையின் பலவீனம் வேகத்தைக் குறைக்கிறது.
சில வருடப் பிரிவுக்குப் பிறகு, அதிதி ராவைச் சந்திக்கும்போது தன்னுடைய கோபம், திமிர் எல்லாவற்றையும் கைவிட்டுத் திருந்திவிட்டதாக கார்த்தி சொல்கிறார். திருந்தியதற்கான எந்தத் தடயமும் இல்லை. மோசமாக நடந்துகொண்டு மன்னிப்பு கேட்கும் தன்னுடைய வழக்கப்படியே அவர் மன்னிப்பு கேட்கிறார். காதலியும் (வழக்கம்போல) மன்னித்து விடுகிறார். இதைத்தானே அவர்கள் படம் முழுவதும் செய்துகொண்டிருக் கிறார்கள்?
மருத்துவமனையில் கார்த்தி, அவரது குடும்பம் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இடையே நடக்கும் வாக்குவாதக் காட்சியில் மட்டும் யதார்த்தம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப்படும் காட்சிகளும், இயற்கை அழகில் மனம் பறிகொடுக்கும் காட்சிகளும் ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கின்றன.
‘நான் குண்டு போடுறவன். நீ உயிர்களைக் காப்பாத்துறவ’ என்று அடிப்படை முரண்பாட்டைக் காட்டுவதில் தொடங்கி.. ‘பொய் சொல்ற… ஆனா கேட்க சந்தோஷமாத்தான் இருக்கு’, ‘அவன் நல்லவனா, கெட்டவனாங்கிறது எல்லாம் அவனுக்கும் அவனைப் படைச்சவனுக்கும் இருக்கிற பிரச்சினை. உன்னோட பொறுப்பு, அவங்க ரெண்டு பேரையும் எவ்ளோ சீக்கிரமா சந்திக்க வைக்க முடியும்ங்கிறது மட்டும்தான்’ என்பது போன்ற வசனங்களில் மணிரத்னம் தெரிகிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்ட நாயகன் எப்படியும் தப்பித்துவிடுவான் என்பது தெரியும். ஆனால் அவ்வளவு எளிதிலா?! கார்கில் போரின்போது பிடிபட்ட வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்று கூகுளில் தேடினாலே விஷயங்கள் கொட்டும். இங்கே கைதிகள் ஏகாந்தமாக காபி சாப்பிடுகிறார்கள், வாலிபால் விளையாடுகிறார்கள், நூலகத்தில் புத்தகம் படிக்கிறார்கள், சிறைச் சுவரில் துளைபோட்டுத் தப்பிக்கிறார்கள்.
நாயகன், நாயகி தவிர எந்தக் கதாபாத்திரத்தையும் போதிய விவரிப்பு அல்லது அழுத்தத்துடன் காட்டாதது இன்னொரு குறை. ஆர்.ஜே.பாலாஜி, டெல்லி கணேஷ்கூட பட்டும் படாத பாத்திரங் களாகவே வந்துபோகிறார்கள்.
கார்த்தி போர் விமானியாக உடலிலும், கோப நடிப்பிலும் ‘ஃபிட்’. காதலைக் காட்டக் கண்களை விரிக்கிற போதுதான் குளுமை போதவில்லை.காற்றைப் போல மென்மையாகத் தன் இருப்பால் நம்மைக் கவர்கிறார் அதிதி ராவ். காதலில் கசிந்துருகிப் பரவசமடைகிறார்.
மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் 25-வது ஆண்டில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில், ரஹ்மான் தன் பங்குக்கு அடுத்தகட்டத்தைக் காட்டிவிட்டார். மணிரத்னம் அங்கேயே நின்றுவிட்டார்!
உயிர்ப்பு குறைந்த காற்று வெளி!