அகதிகள் முகாம் சென்று பார்த்தால்தான் புரியும்! -மலாலா யூசுஃப்ஸை

பாகிஸ்தானில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடர்ந்து தாக்கிவந்த தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியவர், மலாலா யூசுஃப்ஸை. 2012-ம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் பள்ளிக்குச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர்.

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய இவரது சாதனையைப் பாராட்டி, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனது 17-வது வயதில் இந்தப் பரிசை வென்றதன்மூலம், இளம் வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதராக உள்ள இவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சாடியுள்ளார். அவர், “அகதிகளுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்பதை ட்ரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். அகதிகளுக்காக நீங்கள் கதவுகளைத் திறக்கவில்லை என்றால், அவர்கள் கொல்லப்படும்நிலை உள்ளது. நான் அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளதால், அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்குப் புரிகிறது. அகதிகள் முகாம்களுக்குச் சென்று பார்த்தால்தான் ட்ரம்ப்புக்கு அது புரியும்” எனத் தெரிவித்துள்ளார்.