தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா அவுஸ்ரேலியா இடையே கையெழுத்தாகின.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று (10) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின.
தீவிரவாதம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஒழிக்க இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, பயணிகள் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட உடன்பாடுகள் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டன.
பின்னர் பிரதமர் மோடியும், அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, தீவிரவாதமும், சைபர் குற்றங்களும் சர்வதேச அளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகக் கூறினார்.
இந்த சவால்களை முறியடிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து வியூகம் வகுத்து செயல்பட வேண்டும் என்றும் அப்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவிற்கு அவுஸ்ரேலிய ஒத்துழைப்பு அளிப்பதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியாஅவுஸ்ரேலிய இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி முடிந்ததும் இரு நாட்டுத் தலைவர்களும் டெல்லி மந்தி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி பார்த்த பிரதமர் மோடியும், மால்கம் டர்ன்புல்லும் பின்னர் பயணிகளோடு பயணிகளாக மெட்ரோ ரயிலில் சிறிது தூரம் பயணித்தனர். அப்போது அவர்கள் இருவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் இந்திய பிரதமரும், அவுஸ்ரேலிய பிரதமரும் டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற அக்சர்தாம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.