சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் நாள் 55வயதையடைந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு முதலில் ஆறு மாதங்களும் பின்னர் ஒன்றரை வருடங்களும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
இவருக்கு மீண்டும் ஆறு மாதகாலம் சேவை நீடிப்பு வழங்கினால் மூன்றாவது சேவை நீடிப்பைப் பெற்ற இராணுவத் தளபதியாக இவர் விளங்குவார்.
இதனால், இராணுவத் தளபதி பதவியை குறிவைத்திருக்கும் பல மூத்த மேஜர் ஜெனரல்களின் கனவு நொருங்கிப் போகும்.
இராணுவத் தளபதியாக நியமிக்கப்படாது போனால், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், வரும் ஓகஸ்ட் 18 ஆம் நாள் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் இரண்டாவது பதவி நீடிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து 22 மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள உயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக வரும் ஜூலை 16ஆம் நாள் ஓய்வு பெறவுள்ள நிலையில், முப்படைகளின் தளபதிகளும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்.
கூட்டுப்படைகளின் தளபதி பதவி, இராணுவத் தளபதியாக உள்ள லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்டால், அடுத்த இராணுவத தளபதியாகும் வாய்ப்பு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்குக் கிடைக்கும்.