பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் முன்னிலையில் இன்று இந்தியா- அவுஸ்ரேலியா இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலிய இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக நேற்று புதுடெல்லி வந்தார். அவருடன் ஆஸ்திரேலிய நாட்டின் கல்வித்துறை மற்றும் தொழில் பயிற்சித்துறை மந்திரி சைமன் பிரிமிங்ஹம், அவுஸ்ரேலிய நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட பெரிய குழுவினரும் வந்துள்ளனர்.
இன்று(10) காலை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை மால்கோம் டர்ன்புல் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மால்கோம் டர்ன்புல் முன்னிலையில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் பிரதமராக பதவியேற்ற மால்கோம் டர்ன்புல் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமான பின்னர் பிரதமர் மோடியும் மால்கோம் டர்ன்புல்லும் கூட்டறிக்கை ஒன்றை வாசித்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, மால்கோம் உங்களது (டர்ன்புல்) வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு புதிய மைல்கற்களை தொட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய மால்கோம் டர்ன்புல், இந்திய மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம் என்று உறுதியளித்தார்.
Eelamurasu Australia Online News Portal