தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மே முதல்!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள வெகுஜனப்போராட்டங்களிற்கு அனைத்து தமிழ அரசியல் தலைவர்களது ஆதரவையும் கைதிகளது குடும்பங்கள் நேரினில் சந்தித்து கோரிவருகின்றன.

எதிர்வரும் மே மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது போராட்டத்திற்கு ஆதரவு கோரி இச்சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து. சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரச சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ 3 மாத காலத்திற்குள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிணை வழங்க மறுப்பு தெரிவிக்க வேண்டாம் எனவும் புதுவருடத்துக்கு முன்னர் அவர் தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதமரின் தனிப்பட்ட தலையீட்டு காணப்படுவதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக உரிய குற்றச்சாட்டுகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் உணவுத் தவிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இது தவறான அணுகுமுறையாகும்.

இந்த ஆண்டு சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது. வெசாக் மாதத்தின்போது ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவார்.

எனவே சர்வதேச வெசாக் பண்டிகைக் காலத்தின் அரசியல் கைதிகளையும் விடுவிக்கும் அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும்.
அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.