அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு நேற்று (9) சென்றடைந்துள்ளார். புதுடில்லி வந்துள்ள டர்ன்புல்லுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா-அவுஸ்ரேலிய இடையை ராணுவம்,பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. மேலும் சுற்றுப்புறச்சூழல்,விளையாட்டு ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் ஏற்படலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் மால்கமின் இந்த பயணத்தின்போது எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தெரிகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் பிரதமராக மால்கம் பதவி ஏற்றபின்பு அவர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் தடவையாகும். அவுஸ்ரேலியாவில் சமீபகாலமாக இனவெறி தலைதூக்கியுள்ளது. அங்கு பணிக்காக சென்றிருக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையிலும் இந்தியர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் மால்கம்வை பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.
இருநாடுகளிடையே பொருளாதார ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் மால்கம் பயணத்தின்போது இருநாடுகளிடையே பொருளாதார ஒப்பந்தம் ஏற்படாது என்று இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய ஹைகமிஷனர் ஹரீந்தர் சித்து தெளிவாக கூறியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டுக்குள் இருநாடுகளிடையே பொருளாதார ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிந்துவிட்டது என்றும் சித்து மேலும் கூறினார்.
இருநாடுகளிடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று இந்திய தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பால் மற்றும் விவசாய பொருட்களுக்கு இந்தியா அதிக அளவு கட்டணம் விதிப்பது குறித்தும் அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயினுக்கு அந்த நாடு அதிக வரி விதிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவுஸ்ரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுக்கொண்டியிருக்கிறது. இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய அவுஸ்ரேலியா பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துவிட்டது.
தற்போது இருநாடுகளுக்கிடையே யுரேனியம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டியிருக்கிறது. இருந்தபோதிலும் இதுதொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து உறுதியாக கூறமுடியாது என்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை இணை செயலாளர் (தெற்கு) ஜெய்தீப் மஜூம்தார் கூறினார்.