பாகுபலியால் திருமணத்துக்கு தடையா? அனுஷ்கா பதில்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி 2, ஏப்.28ம் திகதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனுஷ்கா பேசும்போது, ‘பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் உருவாக 5 ஆண்டுகள் ஆனது. இதனால்தான் எனது திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதா என பலரும் கேட்கிறார்கள். திருமணத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நடக்கும்போது நடக்கும்.

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிறகு பாகுபலி 2 படத்துக்காக எடையை குறைக்க சிரமப்பட்டது உண்மைதான். ஆனால் கடும் பயிற்சி மூலம் தோற்றத்தில் மாற்றம் கொண்டு வந்தேன்’ என்றார். இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, ‘பாகுபலி கேரக்டருக்கு பிரபாஸை தவிர வேறு எந்த இந்திய பட ஹீரோவையும் எண்ணிப் பார்க்க முடியாது. தமிழில் ரஜினியை இயக்குவது உள்பட அடுத்த படம் தொடர்பாக எதுவும் யோசிக்கவில்லை.

எல்லாமே பேச்சுவார்த்தை அளவிலே உள்ளது. 2.0 படத்துக்கும் பாகுபலிக்கும் போட்டி என்பதெல்லாம் உண்மை கிடையாது. இரண்டுமே வேறு பாணி படங்கள்’ என்றார். ‘இந்த படத்தில் நடித்த பிறகுதான் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளும் என்னைத் தேடி வருகிறது. இந்த படம் மூலம் பிரபாஸ், இளம்பெண்களின் டார்லிங் ஆகிவிட்டார். அவரை சந்திக்க வேண்டும் என மும்பை தோழிகளும் என்னை நச்சரித்து வருகிறார்கள்’ என்றார் தமன்னா.