சிறீலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்துலக நிதிக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து அவுஸ்ரேலியா அரசாங்கம் 15மில்லியன் டொலரை வழங்க முன்வந்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது.
சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்திரேலியா உதவும் என்று அந்த நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சர் கொன்சீற்றா பியராவென்ரி வெல்ஸ் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் நேற்று அவுஸ்ரேலிய தூதரகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
“பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கவும் நாம் பணியாற்றுவோம்.
சிறீலங்காவின் வேலைப் படையில் பெண்களின் பங்களிப்பு தற்போது, 35.3 வீதமாக உள்ளது. பெண்களை வேலைக்கு அமர்த்தும் திட்டமானது, பெண்களுக்கான உதவியாகவும், நாட்டின் பொருளாதாரத்துக்கான நன்மையளிப்பதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal