அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவருக்கு கத்தி குத்து!

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இது ஐ.எஸ். தொடர்பு தாக்குதலா என்ற கோணத்தில் அவுஸ்ரேலிய காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது மிக்க இளைஞரை இரண்டு பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அக்பர் என்ற அந்த மாணவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நியூ சவுத் வால்ஸ் என்ற பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார்.

தாக்குதலுக்கு ஆளான அந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 மற்றும் 16 வயதை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் ஐ.எஸ். தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இளைஞர்கள் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அதில், குயின்பியன் பகுதியில் ஸ்டேஷன் ஊழியர் ஒருவரை கொன்றது இந்த இளைஞர்கள் தான் என்று தெரிவதாகவும் கூறினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல், “இரண்டு இளைஞர்கள் இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்போது விசாரணையின் பிடியில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.