அவுஸ்ரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது.

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது. ராக் கேப்டால் என்ற இடத்தில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ராக் கேப்டால் நகரம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நகரில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. முதல் மாடி வரை வெள்ளம் மூழ்கடித்தது.

இந்த நகருக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, வெளியில் இருந்து நகருக்குள் யாரும் செல்ல முடியவில்லை. உள்ளே இருந்தும் யாரும் வெளியே வர முடியவில்லை.

ஆறு உடையும் நிலையில் இருந்ததால் முன் கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.

எனவே மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். இதனால் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

ஆனாலும், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகமும் இயங்கவில்லை. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.