முல்லைதீவில் இருந்து மட்டு நகருக்கு ஆயுதங்களை கடத்த முற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் நால்வர் கைதாகியுள்ளனர். நீதிமன்றினில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முல்லைதீவில் இருந்து மட்டக்களப்பிற்கு சில ஆயுதங்களை பேருந்தில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து மேலும் இரு போராளிகள் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போது நீதவான் இவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இருவர் கடந்த மாசி மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் ஐவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.