அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளிற்கான அமைச்சரிடம் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த கலந்துரையாடலின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான நிலைமை, புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்வதற்கான பொருளாதார நிலமை, போர்க்காலத்தின் பின்னரான நிலைப்பாடுகள் குறித்து பேசப்பட்டதுடன், பெண்களின் நிலைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
போரின் பின்னர் நடைபெற்ற விடயங்களை மேல் மட்டங்களில் கதைக்காமல் போருக்கு எவை காரணமாக இருந்தன என்பது குறித்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினேன் என்றார்.
புகலிடம் கோரி வருபவர்களை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்பதுடன், மீள நாட்டிற்கு அனுப்புவதாக இருந்தால் கூட மனிதாபிமானத்துடன் செயற்படுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.