டிரம்ப் மனைவி புகைப்படம் : அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் தொடர்பாக, அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 70, மனைவி மெலனியா டிரம்பிற்கு, 46, அமெரிக்க அரசில், ‘முதல் குடிமகள்’ என்ற அரசு முறை அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக வெளியிட்டது.
இதில், முன்னாள் மாடல் அழகியான மெலனியாவின் புகைப்படம், பாரம்பரிய முறையில் அல்லாமல், சற்று கவர்ச்சியாக இடம் பெற்றுள்ளது. இது குறித்து, அமெரிக்க மக்கள், சமூக வலைதளங்களில் விமர்சித்து உள்ளனர்.

‘மெலனியாவின் புகைப்படம், அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அழகாக உள்ளது’ என, சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதே சமயம், ‘அரசின் அதிகாரப்பூர்வ படம், மாடல் அழகி படம் போன்றுள்ளது. அமெரிக்க அரசின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில், இந்த புகைப்படம் அமைந்துள்ளது’ என்றும், சிலர் தெரிவித்து உள்ளனர்.