அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு, மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட குடும்பம் ஒன்றின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களை காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குறித்த குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் டெபீ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் அடைமழை பெய்து வந்ததாகவும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அனர்த்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த குயின்ஸ்லாந்து அவசர சேவையின் பேச்சாளர், “இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்கும் வகையில், இரண்டு குழந்தைகள் அவர்களது தாயாருடன் வீட்டின் கூரையில் இருந்தனர். நாங்கள் அவர்களை காப்பாற்ற விரைந்து சென்றோம். அவர்களை பாதுகாப்பாக மீட்டு ஏறக்குறைய 15 நிமிடங்களிலேயே அந்த வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது” என தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள குறித்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.