ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய செயலியாக ‘வெப்லர்’ அறிமுகமாகியுள்ளது. ஆனால், இது வழக்கமான ஒளிப்படப் பகிர்வுச் செயலி அல்ல. இது சமூகத்தன்மை கொண்ட பகிர்வுச் செயலி.
வெப்லர் மூலம் எடுக்கப்படும் படங்களை ஒரே இடத்தில் உள்ள குழுவினர் அனைவரும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். உதாரணத்திற்கு ஒரு திருமண நிகழ்வை எடுத்துக்கொள்வோம். எப்படியும் விருந்தினர்களில் பலர் திருமணக் காட்சியைப் பல கோணங்களில் ஸ்மார்ட்ஃபோனில் கிளிக் செய்வார்கள். அவற்றைப் பின்னர் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
எல்லாம் சரி, இப்படி எடுக்கப்பட்ட எல்லாப் படங்களையும் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? திருமண விழாவில் பங்கேற்ற நண்பர்களை எல்லாம் தொடர்பு கொண்டு அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்கலாம். ஆனால் நடைமுறையில் இது கொஞ்சம் சிக்கலானது. ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு படங்களைச் சேகரிப்பது எளிதல்ல.
இது போன்ற நிகழ்வுகளில் எடுக்கப்படும் ஒளிப்படங்களைச் சேகரிப்பதை எளிதாக்கும் வகையில் வெப்லர் உருவாக்கப்பட்டுள்ளது. வெப்லர் செயலியை நிறுவிய பிறகு, படங்களைச் சேகரிக்க விரும்பும் இடங்களில் இந்தச் செயலி மூலமாக கேமராவில் காட்சிகளை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு முன்னர் உங்களுக்கான நண்பர்கள் குழுவை உருவாக்கி அதில் இணைய நண்பர்களுக்குச் செயலி மூலம் அழைப்பு விடுக்க வேண்டும்.
அதன் பிறகு, நீங்கள் கிளிக் செய்யும் படங்கள் நண்பர்களுடன் பகிரப்படும். அதே போல அவர்கள் கிளிக் செய்யும் படங்கள் உங்கள் கேமராவிலும் வந்துவிடும். ஆக, ஒரே நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை எளிதாகத் தொகுத்துவிடலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://www.vebbler.com/faq.html