நண்பரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திருடி அவுஸ்ரேலியாவில் வைத்தியராக நடித்து ஆள்மாறாட்டம் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 30 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறை நிபுணராக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்துள்ளார்.
2003-ம் ஆண்டிலிருந்து 2014 வரை சுமார் 11 ஆண்டு காலம் அந்த மருத்துவமனையிலும் அவுஸ்ரேலியாவில் உள்ள மூன்று இதர மருத்துவமனைகளில் உதவி வைத்தியராக பணியாற்றிய ஆச்சாரியா, அந்நாட்டின் குடியுரிமையை பெற்றதுடன், அவுஸ்ரேலியாவில் வீடு ஒன்றையும் வாங்கினார். அவுஸ்ரேலிய நாட்டு குடிமகன் என்ற வகையில் அந்நாட்டு கடவுச்சீட்டு ஒன்றையும் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரின் அருகேயுள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வரும் வைத்தியரான சாரங் சிட்டாலே என்பவருக்கு சில நண்பர்கள் மூலமாக ஒரு தகவல் கிடைத்தது.
தனது பெயரால் போலி ஆவணங்களை தயாரித்து அவுஸ்ரேலியாவில் ஷியாம் ஆச்சாரியா என்பவர் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அறிந்த அவர் இதுதொடர்பாக அவுஸ்ரேலிய காவல்துறையிடம் புகார் அளித்தார்.
1999-2000 ஆண்டுகளுக்கிடையில் தானும் ஆச்சாரியாவும் ஒன்றாக வசித்தபோது தனது சான்றிதழ்களையும், சில முக்கிய ஆவணங்களையும் திருடிய ஆச்சாரியா, அதை வைத்து ஆள்மாறாட்டம் செய்து வருவதாக டாக்டரான சாரங் சிட்டாலே தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய காவல் துறை ஆச்சாரியாவை கைது செய்து சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த பெண் நீதிபதி ஜெனிபர் அட்கின்சன், ஆச்சாரியா செய்துள்ள மோசடி, மிகவும் மோசமான குற்றச்செயலாக உள்ளதால் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், எதிர்தரப்பு வாதியான சிட்டாலேவின் வழக்கு செலவினங்களுக்கு என்று தனியாக 22 ஆயிரம் டாலர்களை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
Eelamurasu Australia Online News Portal

