‘பயணம் ஒரு ஆசிரியரைப் போன்றது. அது நமக்கு ஏராளமான பாடங்களை கற்பிக்கிறது’’ என்கிறார், பாலிவுட் நடிகையும், தொழிலதிபருமான குல் பனாக்.
பயணங்கள் குறித்து அவர் மேலும் பகிரும் விஷயங்கள்…
‘‘இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்தவள் நான். இயற்கையாகவே இடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தாலும், உல்லாசப் பயணத்துக்கும் எங்கள் குடும்பம் உரிய முக்கியத்துவம் கொடுத்தது. எனக்கு கஷ்டங்கள் வரும்போதெல்லாம் அவைகளில் இருந்து தப்பிக்க நான் பயணங்களை பயன்படுத்திக் கொண்டேன். அதாவது, பரீட்சைகள், பரீட்சை முடிவுகள், நெருங்கிய தோழிகளுடன் ஏற்படும் மனக்கசப்பு, பள்ளியில் சீண்டல்காரர்களின் கிண்டல்கள், எனது தவறுகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் இவை எல்லாவற்றில் இருந்தும் நான் தப்பிக்க உதவும் வழியாக பயணங்கள் இருந்தன.
எங்கள் வாழ்க்கையில் பயணம் என்பது அடிக்கடி இடம் பெறும் விஷயமாக இருந்ததால் அதன் தாக்கமும் அதிகமாக இருந்தது. எனது பெற்றோர், எங்களது வருடாந்திர சுற்றுலாப் பயணத்துக்காக (தாத்தா– பாட்டியை சந்திக்கச் செல்லும் பயணம் தனி) தீவிரமாகத் திட்டமிடுவார்கள்.
ராணுவ அதிகாரியான அப்பாவுக்கு ஆடம்பர வசதி வாய்ப்பில்லை என்றாலும், சுவாரசியமான சுற்றுலாக்களுக்குத் திட்ட மிடுவார். மற்றவர்களுடனான உரையாடலில் அவர் பிறரைப் பற்றி மதிப்பாகக் கூறுவது, ‘அவர் நிறையப் பயண அனுபவம் உள்ளவர்’ என்பதாக இருக்கும். நானும் அந்த மாதிரி பெயரெடுக்க நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
ஒருவர் தான் வாழும் சூழலை விட்டு வெளியே செல்லும்போது அவர் பார்ப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கும் என்பதை நான் வளர வளரப் புரிந்து கொண்டேன். அதுதான், புதிய புதிய இடங்களைக் காணும் தாகத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்தத் தாகம் இன்னும் தணியவில்லை.
இப்போது ஒரு வளர்ந்த பெண்ணாக, பயணங்களுக்கான எனது காரணங்களும் வளர்ந்திருக்கின்றன. இப்போது எனது பயணங்களில் பல மதிப்புமிக்க விஷயங்கள் சேர்ந்திருக்கின்றன.
பயணங்கள், நாம் அன்றாடம் அதிமுக்கியமானதாகக் கருதும் பல விஷயங்கள் முக்கியத்துவமற்றவை என்ற உண்மையை உணர்த்தும். அதனால் வாழ்க்கையை பற்றிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும்.
‘அற்ப விஷயங்களுக்காக மண்டையை உடைத்துக்கொண்டும் வியர்வை சிந்திக்கொண்டும் இருக்காதீர்கள், அவை மிகச் சாதாரணமானவை’ என்று பயணங்கள் நமக்கு சொல்கின்றன.
நான் வளர்த்துக்கொண்டிருந்த தவறான நம்பிக்கைகள் பலவற்றையும் பயணங்கள் தகர்த்திருக்கின்றன. ஒரு இடம், அங்குள்ள மக்கள் பற்றி நாமாக ஒரு கருத்து வைத்திருப்போம். அது, நாமாக அனுபவிக்காமல், காதில் விழுந்த சேதிகளால் உருவானதாக இருக்கும்.
நாம் நினைப்பதைப் போல அந்த இடத்து மக்கள் இல்லை என்பதை உணரும்போது நமக்குள் ஒருவித அடக்கம் வருகிறது. பயணங்கள் மூலம் நிறைய அறிய வேண்டியவை இருக்கின்றன என்பதை உணரும்போதுதான், அதற்கு இந்த ஆயுட்காலம் போதாது என்பது நமக்கு உறைக்கிறது.
உதாரணத்துக்கு, நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்றதையும், சில காலம் அங்கே வசித்ததையும் கூறலாம்.
பணி சார்ந்து எங்கப்பா ஜாம்பியாவுக்கு இடமாற்றம் செய்யப் பட்டபோது, எங்கள் குடும்பமும் அங்கு சென்றது. அப்போது எனக்கு 15 வயது. ஆப்பிரிக்காவைப் பற்றி எனக்கு சில முன் கருத்துகள் இருந்தன. ஆனால் ஆப்பிரிக்காவில் இருந்த காலங்களில் அவையெல்லாம் அப்படியே தூள் தூளாக்கப்பட்டன. என் கண்களைத் திறக்கும் அனுபவமாக அது அமைந்தது.
ஆப்பிரிக்க மக்களின் அன்பு, அங்கு நிரம்பி வழியும் அழகு எல்லாவற்றையும் நான் கற்பனையே செய்திருக்கவில்லை. ஜாம்பியாவில் நான் கழித்த காலத்தில் வாழ்க்கையின் மிக முக்கியமான பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
புதிய இடங்களுக்குச் செல்வதும், புதிய புதிய மனிதர்களைச் சந்திப்பதும் வாழ்க்கையில் புதிய பார்வையை ஏற்படுத்துவதையும், நமது எண்ணங்களை விரிவாக்குவதையும் நான் பல நேரம் உணர்ந்திருக்கிறேன்.
அந்தப் புதிய பார்வை, நம்மைப் பல காலமாக வருத்திக்கொண்டிருந்த பிரச்சினைக்கும் கூட தீர்வாக அமைவதை அனுபவித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும், ஒரு நடிகையாகவும் தொழிலதிபராகவும் நான் என்னுடைய பணிகளில் மேலும் உற்சாகமாகவும் தீவிரமாகவும் ஈடுபடுகிறேன். ஒவ்வொரு பயணத்திலும் எனது மனவளமும் கூடுகிறது.
மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாடம். ஆனால் அதைத்தான் நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இப்போதுள்ள எல்லா விஷயங்களும் அப்படியே நீடிக்கும் என்று தவறாகக் கருது
கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நாம் உணர்வதில்லை.
ஒரு பயணியாக நீங்கள் எவ்வளவுதான் முன்கூட்டியே தயாராகி இருந்தாலும், பயணங்களில் எதிர்பாராத விஷயங்களுக்குக் குறைவே இருக்காது. முழுக்க முழுக்க நீங்கள் நினைத்தது போலவோ, இணையத்தின் மூலம் அறிந்ததைப் போலவோ ஒரு பயணம் இருக்காது.
அதுபோன்ற தருணங்களில்தான், மனிதனின் இயல்பான குணமான, சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்வது கைகொடுக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மையைத்தான் அன்றாட இயல்பான இறுக்கமான வாழ்க்கையால் நாம் இழந்துவிடு கிறோம்.
பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றிலும் மேலான பாடம், பயணத்தை மதிப்பதும், அதை நினைவில் வைத்துப் போற்றுவதும்தான். நாம் சென்றடையும் இடம் முக்கியம்தான். ஆனால் அங்கு போகும் பயணத்தில் நமக்குப் பல அற்புதமான அனுபவங்கள் கிட்டும். அதை அனுபவிப்பது அதைவிட முக்கியம்.
வாழ்க்கையும்கூட அதுபோன்ற ஒரு பயணம்தான் என்று நான் எண்ணுகிறேன். நாமெல்லோரும் போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். அதற்கான நமது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது, அதை மேலும் எப்படி அழகாக்கிக்கொள்வது என்றுதான் நாம் சிந்திக்கவேண்டும். எனக்குள் உள்ள தத்துவஞானியை பயணம் வெளிக்கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அன்பு செலுத்துவதும், வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவிப்பதும் தான் முக்கியம் என்று தற்போது நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார்.