அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடாத்து என்ற மைத்திரிபால சிறிசேனவின் யோசனையை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் நிராகரித்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போதே, அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்தார்.
இந்த திட்டம், சில மாகாணசபைகளை முன்கூட்டியே கலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடையவுள்ளது.
மத்திய, மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் 2018 செப்ரெம்பரில் முடிவடையவுள்ளது. மேல் மாகாணசபையின் பதவிக்காலம் 2019 ஏப்ரலிலும், ஊவா, மற்றும் தென் மாகாணசபைகளின் பதவிக்காலம் 2019 செப்ரெம்பரிலும் முடிவடையவுள்ளன.
எல்லா மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதாயின்,சில மாகாணசபைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டும் அல்லது பதவிக்காலம் முடியும் மாகாணசபைகளில் ஆளுனர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே தான் முன்கூட்டியே சில மாகாணசபைகளைக் கலைத்து தேர்தலை நடத்தும் யோசனைக்கு முதலமைச்சர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபை ஒன்றை முன்கூட்டியே கலைப்பதற்கு முதலமைச்சரின் அனுமதி பெறப்படுவது அவசியமாகும்.