விவசாயிகளை காப்பாற்றி தேசத்தின் வயிற்றை காப்பாற்றுங்கள் – வைரமுத்து

வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கூட சிலதினங்களுக்கு முன்னர் டில்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் வேளையில், கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்விபரம் வருமாறு..

‛‛தமிழக விவசாயிகள், ஜந்தர் மந்தர் வெயிலில் வீதியில் வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றத்தை தருகிறது. விவசாயிகளை காப்பாற்றுவது தேசத்தின் வயிற்றைக் காப்பாற்றுவது போன்றது. இதில் அரசியல் பார்க்கக்கூடாது.

தனக்கு எதிராக குடை பிடித்தவர்களுக்கும் சேர்த்தே மழை பெய்கிறது. எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்தே தான் அரசு இயங்குகிறது.

விவசாயிகள் அழிந்தால், பாசன நிலங்கள், கூட்டாண்மை நிறுவனங்களின் நாட்டாண்மையின் கீழ் வந்து விடும். சேவைத் துறைக்கு இரு கண்ணையும் காட்டும் மத்திய அரசு, உற்பத்தி துறைக்கு ஓரக்கண்ணாவது காட்ட வேண்டும்.

எங்களை தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் கூடிப்பேசி வஞ்சித்து விட்டன. வடக்கும் எங்களை வஞ்சித்து விடக்கூடாது. விவசாயத்தை காத்து; விவசாயியை மீட்க இதுவே தருணம் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.