தட்டையான எந்தப் பரப்பையும் தொடுதிரையாக மாற்ற வேண்டுமா? வந்து விட்டது, ‘லேம்பிக்ஸ்.’ இதை ‘ஸ்மார்ட் லேம்ப்’ என்று ஊடகங்கள் அழைத்தாலும், உண்மையில் இது ஒரு ‘புரஜக்டர்’ வகையைச் சேர்ந்தது தான்.
கணினி அல்லது ஸ்மார்ட்போனை, ‘வைபை’ மூலம் லேப்பிக்ஸ் சாதனத்தை இணைத்தால் போதும். நீங்கள் விரும்பும் சம தளத்தில் கணினி திரை அல்லது மொபைல் திரையை, ‘புரஜக்ட்’ செய்யும். இது சற்று கூடுதல் பரப்பளவைத் தருவதோடு, சுதந்திரத்தையும் தருகிறது.
பார்க்க சாதாரண மேசை விளக்கு போல இருக்கும் லேம்பிக்சுக்குள், ‘ராஸ்பெர்ரி பை’ கணினியும், 8 மெகா பிக்செல் கேமராவும், 400 லுாமென் பிரகாசமுள்ள புரஜக்டரும் உள்ளன. மேசைப் பரப்பில் அது காட்டும் திரையை நீங்கள் தொடு திரைபோல பயன்படுத்தி இயக்கலாம்.
வடிவமைப்பாளர்களுக்கும், பல இடங்களில் இருந்துகொண்டு செயல்படும் பணியாளர்களுக்கும் லேம்பிக்ஸ் உதவிகரமாக இருக்கும். அசல் பொருட்கள், ஆவணங்களை லேம்பிக்சுக்கு அடியில் வைத்தால், அதை அப்படியே பிரதியெடுத்து, கணினி கோப்புகளாக மாற்றவும் லேம்பிக்சால் முடியும்.
‘ஆக்மென்டெட் ரியாலிட்டி’ எனப்படும், நிஜ உலகமும் எண்வய உலகமும் கலந்த, ‘கலவை மெய்நிகர்’ தொழில்நுட்பத்தின் துவக்கம் தான் லேம்பிக்ஸ் போன்ற கருவிகள் என்று வல்லுனர்கள் மெச்சுகின்றனர்.