பொடி வடிவில் தடுப்பு மருந்து

உயிர் காக்கும் தடுப்பூசிகளை குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்திருக்காவிட்டால், அவை வீரியமிழந்துவிடும். ஆப்ரிக்கா போன்ற மின் வசதி, குளிர் பதன வசதி குறைந்த நாடுகளில், கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களுக்கு இது பெரிய சவால்.

இந்த பிரச்னைக்கு புனேயிலுள்ள, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ ஒரு புது தீர்வை கண்டறிந்துள்ளது. வயிற்றுப் போக்கை உண்டாக்கி, கவனிக்கா விட்டால் மரணத்தையே கூட ஏற்படுத்தும் ‘ரோட்டா வைர’சுக்கு எதிரான, பி.ஆர்.வி.- பி.வி., என்ற தடுப்பு மருந்தை, திரவ நிலையிலிருந்து உலர்ந்த பொடியாக மாற்றி வெற்றி கண்டுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.அதி குளிர்ச்சியுள்ள திரவ நைட்ரஜனில், பி.ஆர்.வி.-பி.வி., தடுப்பு மருந்துள்ள கலனை
குளிர்வித்து, பிறகு அதிலுள்ள நீரை வெற்றிடத்தால் உறிஞ்சிய பிறகு, அது உலர்ந்து பொடியாகி விடுகிறது. இதை மருத்துவ பணியாளர்கள் எங்கும் எடுத்துச் செல்லலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம், 2014ல் நைஜர் நாட்டில், 3,500 குழந்தைகளுக்கு இந்த முறையில் மூன்று தடவை தரப்பட்ட போது ரோட்டா வைரஸ் நோய் கணிசமாக தணிந்தது.

எதிர்காலத்தில் பிற தடுப்பூசி மருந்துகளுக்கும் இந்த முறையை பின்பற்ற முடியுமா என ஆய்வுகள் தொடர்கின்றன.