ரஜினியை நேற்று சந்தித்த மலேஷிய பிரதமர், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசியல் கட்சித் துவங்கினால், தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, நேற்று இரவோடு இரவாக, கமல், சரோஜா தேவி, பொன் வண்ணன், சரத்குமார், சிவகுமார், நாசர், விஷால், ராதாரவி, சுஹாசினி, மீனா, சிம்பு, சினேகா, கோவை சரளா, விவேக், வடிவேலு உட்பட பல நடிகர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர். கட்சியின் பெயர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்ரி, பத்மினி ஆகிய பெயர்களின் சாயல் வரும் வகையில் அமைய வேண்டும் என ஆசைப்பட்டனர். இறுதியில், ‘தமிழக மக்கள் நட்சத்திர கட்சி’ எனப் பெயர் சூட்டி, கட்சிக் கொடியையும் வடிவமைத்தனர். மேலே ஆரஞ்சு, நடுவில் கறுப்பு, கீழே மஞ்சள் ஆகிய நிறங்களுடன், நடுவில், நீல நிற நட்சத்திர சின்னம் உடையதாக, கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களே… நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தால், ஆறுகளை துார்வாரி இருக்கலாம்; நதிகளை இணைத்திருக்கலாம்; ஒரு நகரை சீரமைத்திருக்கலாம்; மாநிலத்தில் உள்ள சீர்கேடுகளை, பிரசாரத்தின் மூலம் சரி செய்திருக்கலாம். ஆனால், பல ஆண்டு கால சண்டையில், தங்களுக்குத் தேவையான நடிகர் சங்க கட்டடத்தின் அடிக்கல்லே, நேற்று தான் நாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது போல் சித்தரிப்போம் என்ற ஆசையில் எழுந்த கற்பனை இது! இன்று என்ன தினம், தெரியும் தானே!