குவாலியர் மகாராணி விஜய ராஜே சிந்தியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா எழுதிய நூலை தழுவி தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்தின் டிரெயிலரை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது.
15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பலமுறை பாராளுமன்ற எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
12-10-1919 அன்று பிறந்த விஜய ராஜே சிந்தியா கடந்த 25-01-2001 அன்று டெல்லியில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாக ‘ராஜபாதையில் இருந்து மக்கள் மன்றம் நோக்கி’ (“Rajpath Se Lok PathPar”) என்ற தலைப்பில் மிருதுளா சின்ஹா என்பவர் நூலாக எழுதியிருந்தார்.
இந்த நூலை தழுவி “Ek Thi Rani Aisi Bhi”, இப்படியும் ஒரு ராணி இருந்தார் என்ற திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா என்பவர் உருவாக்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பிரத்யேகமாக திரையிடப்பட்ட இந்தப் படத்தை வர்த்தக ரீதியாக திரையிட படக்குழுவினர் சமீபத்தில் தீர்மானித்தனர்.
கதாநாயகனாக வினோத் கண்ணாவும், மகாராணி பாத்திரத்தில் கதாநாயகியாக ஹேமா மாலினியும் நடித்துள்ள இந்தப் படத்தின் வர்த்தகரீதியான டிரெய்லர் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
தற்போது கோவா கவர்னராக பொறுப்பு வகிக்கும் மிருதுளா சென்னின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டு இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக இவ்விழாவில் பேசிய நடிகர் அமித்தாப் பச்சன் கூறினார்.