வலி.வடக்கினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை தம்மிடம் விற்பனை செய்யவேண்டும் அல்லது மேலும் நான்கு வருடங்களிற்கு வாடகைக்கு தரவேண்டுமென இலங்கை இராணுவம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
இடம்பெயர்ந்த நிலையினில் உறவினர் நண்பர்களது வீடுகளினில் வாழ்ந்து வரும் குடும்பங்களையே நேரினில் தேடிச்செல்லும் இராணுவ அதிகாரிகள் நிர்ப்பந்தித்துவருகின்றனர்.அவ்வாறு விற்பனை செய்யவிருப்பமில்லாவிடின் வாடகை ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு படைத்தரப்பிற்கு நான்கு வருட காலத்திற்கு வாடகைக்கு தரவேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.
கடந்த 30வருடங்களிற்கு மேலாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து உதவுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரியிடம் விண்ணப்பித்தவர்களிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் நல்லாட்சி ஜனாதிபதியிடம் வலி.வடக்கினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி சில குடும்பங்கள் மகஜர்களை கையளித்திருந்தன.அக்குடும்பங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்த நிலையினில் காணிகளை விற்பனை செய்ய அல்லது வாடகைக்கு வழங்க வேண்டுமென இலங்கை இராணுவம் நிர்ப்பந்திக்கத்தொடங்கியுள்ளது.
இதனிடையே அண்மையினில் படையினரால் நடத்தப்பட்ட கூட்டமொன்றிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் தமது காணிகளை விற்கவோ வாடகைக்கு வழங்கவோ இடம்பெயர்ந்த மக்கள் மறுதலித்துள்ளனர்.
இதனிடையே இலங்கை இராணுவத்தின் பிரதான அலுவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்ற மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், மேலும் நாம் காணிகளை விடுவிக்கவுள்ளோம். இதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிப்பு திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை முகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal