உடல் நிலை சரியில்லை என்றால் ஒவ்வொருவரும் நாடுவது அவர்களின் குடும்ப வைத்தியரை. ஆஸ்திரேலியாவில் குடும்ப வைத்தியர் GP என்று அழைக்கப்படுவர். அவுஸ்ரேலிய குடியுரிமை உடையவர்கள், நிரந்திர வதிவிட உரிமை கொண்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் குடும்ப வைத்தியர் மற்றும் நிபுணர்களிடம் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவ ஆலோசனை பெறலாம்.
பல்வேறு விதமான உடல் நல, மனநல பிரச்சனைகளுக்காக நீங்கள் குடும்ப வைத்தியரை அணுகலாம். குடும்ப வைத்தியரிடம் கட்டணம் செலுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற நீங்கள் Medicare அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் Medicare அட்டை இல்லாதவர்களும் கட்டணம் செலுத்தி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார் Melbourneல் வசிக்கும் GPயான அவுஸ்ரேலிய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் Dr Tony Bartone.
ஆனால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் Medicare கட்டணத்திற்குள் அடங்குவதில்லை, இருந்தபோதும் சில மருத்துவர்கள் தங்களின் சேவைக்கு Medicare கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வர். அதேபோல் குடும்ப வன்முறை, தொற்று, Chronic Illnessஎனப்படும் தீராத வியாதிகள், கர்ப்பகால ஆலோசனைகள், முழு உடல் பரிசோதனை என்று பல்வேறுபட்ட மருத்துவ சிகிச்சைகளை குடும்ப வைத்தியரிடம் பெற்று கொள்ளலாம். மேலதிகமான சிகிச்சைக தேவைப்பட்டால் GP நிபுணர்களுக்கு பரிந்துரைப்பார்.
குடும்ப வைத்தியரின் சிகிச்சை நிலையம் மூடப்பட்டிருக்கு வேளையில் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தினை, பொதுவாக ஒவ்வொரு சிகிச்சை நிலையங்களும் வழங்கும். அதேவேளை 24 மணி நேர தேசிய தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டும் மருத்துவ ஆலோசனைகள் பெற்று கொள்ளலாம் என்றுதெரிவிக்கிறார் AMAயின் Dr Tony Bartone.
Queensland மற்றும் Tasmania மாநிலங்களை தவிர மற்றைய மாநிலங்களில் தனியார் மருத்துவ காப்பீடு இல்லாத நோயாளர்கள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படும்போது ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே அவர்கள் ஆம்புலன்ஸ் சந்தா வைத்திருப்பது நல்லது.
Medicare வைத்திருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் சில சிகிச்சைகளுக்கான செலுத்தப்படும் கட்டணத்தில் 75% வரை Medicareலிருந்து மீள பெற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் தெரியாத நோயாளர்கள் இலவசமாக மொழிபெயர்ப்பு சேவை பெற்றுக்கொள்ளலாம்.