தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு 2 கோடியே 15 இலட்சம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போதே இரா.சம்பந்தனின் வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு குறித்த நிதி கோரப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவால் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. குறித்த குறைறைநிரப்பு பிரேரணையின் பிரகாரம்,
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணனுக்கு 3 கோடியே 98 இலட்சம் ரூபா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் பிரதி அமைச்சர் பைசல் முஸ்தபாவிற்கும் 8 கோடியே 20 இலட்சம் ரூபாவும்,
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கு 4 கோடி, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எம். ஹரீஸிற்கு 3 கோடியே 82 இலட்சம்,
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரணவிற்கு 4 கோடியே 30 இலட்சம் ரூபா,
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சருக்கு 8 கோடியே 60 இலட்சம் ரூபா,
பிரதி அவை தலைவர் செல்வம் அடைக்கலநாதனிற்கு 4 கோடியே 20 இலட்சம் ரூபாவுமாக மொத்த வாகன கொள்வனவாக 37 கோடியே 97 இலட்சம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அபிவிருத்தி மற்றும் வாகன கொள்வனவிற்காக 7808 கோடியே 51 இலட்சத்து 79 ஆயிரத்து 213 ரூபா கோரிக்கை விடுத்து குறை நிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.