மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் பரிசீலனையில்!

சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பத்தை அவுஸ்ரேலியா நிராகரித்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று அவுஸ்ரேலிய தூதரகத்திடம் எழுப்பிய கேள்விக்கு, ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தவொரு சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கும் நழைவிசைவு மறுக்கப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் பரிசீலவனையில் இருப்பதாக அவுஸ்ரேலிய தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பாகவோ அல்லது வேறெந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் நுழைவிசைவு விவகாரங்கள் தொடர்பாகவோ, மேலதிக கருத்துக்கள் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, மேஜர் ஜெனரல் கல்லகே, கடந்த 2016 செப்ரெம்பர் மாதம் அவுஸ்ரேலியா செல்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார் என்று நன்கு தகவல் அறிந்த வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

2016 டிசெம்பர் தொடக்கம், 2017 ஜனவரி வரையான காலத்தை, அவுஸ்ரேலியாவில் உள்ள தனது சகோதருடன் செலவிடுவதற்காகவே அவர் நுழைவிசைவு கோரியிருந்தார்.

இவருடன் நேர்காணலை நடத்திய பின்னர். அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம், “சர்ச்சைகளுக்குச் சாத்தியமான விருந்தினர்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததை அடுத்தே, கல்லகேயின் நுழைவிசைவு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொழும்பு அங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.