கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கூலிப்படையை வைத்து 551பேரை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ கொலைசெய்தார் என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இவரால் கடத்திக் கொலைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் தன்னிடமுள்ளதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல் நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அதுகுறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
ரவிராஜ் என்னுடன் இருந்து, அதற்கெதிராக குரல் கொடுத்தபடியினால் அவரும் கொலை செய்யப்பட்டார். கொழும்பு நகரிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் 551 பேர் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். என்னிடம் பெயர்பட்டியல் உள்ளது என்பதை கோட்டாபய ராஜபக்சவுக்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
நான் என் கண்களால் கண்டேன். கடத்திச்சென்று ஓரிரு தினங்களின் பின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவை இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்லர். சட்டத்திற்குப் புறம்பான இந்த செயற்பாடுகள் அவரால் செய்யப்பட்து.
இவரால் செய்யப்பட்டது என்று கோட்டாபயவினால் கூறமுடியாது. ஏனென்றால் அவரே அப்போது பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியவர். இவ்வாறான குற்றச் செயல்கள் காரணமாகவே சர்வதேச அரங்கிற்கு ஸ்ரீலங்கா சென்று, முழங்கால்படியிட்டு குரல் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாட்டிற்குச் சென்று பேச்சு நடத்துவதை நான் விரும்பவில்லை. ஆனால் முன்னைய ஆட்சியாளர்களே இந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டுள்ளனர்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal