அவுஸ்ரேலிய தேவாலயத்தில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

அவுஸ்ரேலியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இனவெறி காரணமாக இந்திய பாதிரியார் கத்தியால் குத்தப்பட்டார்.

அவுஸ்ரேலியாவில் மெல்போர்ன் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமி களத்தூர் மாத்யூ (48). கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஆனக்காம் பொயில் கரிம்பு பகுதியைச் சேர்ந்தவர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்குள்ள தேவாலயத்தில் திருப்பலி பூஜையும் பிரார்த்தனையும் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பாதிரியார் டோமி களத்தூர் மாத்யூ திருப்பலி பூஜை நடத்தினார். அப்போது சுமார் 72 வயது ஆசாமி எழுந்தார். பாதிரியார் இந்தியாவை சேர்ந்தவர். அவர் ஒரு இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ தான் இருக்க வேண்டும்.

எனவே அவர் திருப்பலி பூஜையும், பிரார்த்தனையும் நடத்தக் கூடாது என இனவெறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென பாய்ந்து பாதிரியார் டோமி மாத்யூவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிரியார் மீதான இனவெறி தாக்குதல் அவுஸ்ரேலியாவில் இந்தியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.