மாற்று தந்திரத்தை கையாண்ட அவுஸ்ரேலியா!

ராஞ்சி டெஸ்டில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலையாக நின்ற புஜாராவை வீழ்த்த முடியாததால் மாற்றுத் தந்திரத்தை கையாண்டது அவுஸ்ரேலியா.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் இன்று(18) தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் சேர்த்துள்ளது. ஒரு நாள் முழுவதும் சுமார் 90 ஓவரில் 240 ரன்கள் என்பது மிகவும் குறைவுதான். ஒரு ஓவருக்கு சராசரியாக 3 ரன்கள் கூட வரவில்லை.

இந்த ஆடுகளத்தில் ரன்அடிக்க மிகவும் கடினமாக இருந்தது என்றாலும், அவுஸ்ரேலியா சிறந்த வகையில் பந்து வீசி நெருக்கடி கொடுத்தது. 328 பந்துகளை சந்தித்து 130 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ள புஜாரா, இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை 139 பந்தில் 40 ரன்கள்தான் எடுத்திருந்தார். நேற்றைய ஆட்ட முடிவில் 26 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்று மதிய உணவு இடைவேளை வரை 139 பந்தில் 40 ரன்கள்தான் சேர்த்திருந்தார். முதல் செசனில் 113 பந்தில் 30 ரன்கள் எடுத்திருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்த பின் ஆட்டம் தொடங்கியது. 155 பந்தில் புஜாரா அரை சதத்தை தாண்டினார்.

அதன்பின் புஜாரா, தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். 214 பந்தில் சதத்தை தொட்டார். தேனீர் இடைவேளையின்போது 232 பந்தில் 109 ரன்கள் சேர்த்திருந்தார். அதாவது மதிய இணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய செசனில் 93 பந்தில் 69 ரன்கள் சேர்த்தார்.

இதனால் தேனீர் இடைவேளையின்போது அவுஸ்ரேலிய அணி யோசனை செய்தது. தற்போதைய நிலையில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கவில்லை. அதே சமயம் அவரை அவுட்டாக்கும் நோக்கத்தில் விளையாடினால் அதிக அளவில் ரன்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஓ’கீபே-யை ஒருபக்கம் புஜாராவிற்கு பந்து போட வைக்க வேண்டும். அவர் லெக் ஸ்டம்பிற்கு வெளியே தொடர்ந்து பந்து வீசினால் புஜாரா காலால் தடுத்து விளையாடுவார். இதனால் ரன்கள் குவிக்க இயலாது என்று திட்டம் தீட்டினார்கள். அதே சமயத்தில் மறுமுனையில் வேகப்பந்து மூலம் நெருக்கடி கொடுத்து மற்ற வீரர்களை அவுட்டாக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.

இதன்படியே தேனீர் இடைவேளைக்குப் பிறகு அவுஸ்ரேலியா தனது ஆட்டத்தில் தங்களது தந்திரங்களை வெளிப்படுத்தியது. இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் புஜாரா 328 பந்தில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி செசனில் இந்தியா 31 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புஜாரா கடைசி செசனில் 94 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். எதிர்முனையில் விராட் கோலி, ரகானே, கருண் நாயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.