சந்திரனில் பீர் தயாரிக்கப் போகிறதா இந்தியா?

கடந்த வியாழனன்று மக்களவையில் சுவையான கேள்வியொன்று விண்வெளித் துறையை கைவசம் வைத்திருக்கும் பிரதமரின் பதிலுக்காக காத்திருந்தது. கேள்வி இந்தியா நிலவில் பீர் காய்ச்சும் திட்டத்தை வைத்திருக்கிறதா? குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அத்திட்டத்தை நிறைவேற்றப் போகிறதா என்று கேட்டார் திருணமுல் கட்சியைச் சார்ந்த உறுப்பினரான சிசிர் குமார் அதிகாரி.

சிசிர் குமாரின் கேள்வியானது மூன்று விதமானது:

1) இந்திய விண்கலம் ஏதேனும் நிலவில் பீர் தயாரிக்கும் திட்டம் உள்ளதா?

2) ஆம் எனில் ஆய்வு திட்டத்தின் விவரங்கள், ஈஸ்ட்டினைக் கொண்டு தயாரிக்கும் சாத்தியம் உண்டா?

3) நிலவில் ஆய்வு செய்ய உலகளவில் ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா?

இதற்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள்  அவ்வாறு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டம் ஏதும் வைத்திருக்கவில்லை. எனினும் டீம் இண்டஸ் எனும் தனியார் நிறுவன அணியொன்று இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தது. ஆய்வின் போது சிறு அளவிலான பீரை காய்ச்சும் திட்டமும் உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கான விண்வெளி ஓடத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தவுள்ளது. இது போன்ற விண்கல ஏவுதல்களை கட்டண சேவையாக இஸ்ரோ நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட டீம் இண்டஸ் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ் எனும் உலகளாவிய போட்டியில் பங்கேற்கும் ஒரே இந்திய நிறுவனமாகும். சுமார் $ 30 மில்லியன் மதிப்பில் நடத்தப்படும் இப்போட்டி விண்வெளி பயணத்தில் ரோபோக்களை பயன்படுத்துவதை சாத்தியமாக்கும் குறைந்தளவில் செலவு பிடிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கும்  நோக்கத்தைக் கொண்டதாகும்.பீர் தயாரிக்க உதவும் ஈஸ்ட் எவ்வாறு விண்வெளியில் தாக்குப் பிடிக்கிறது, நிலவின் புவியீர்ப்பு விசையில் எவ்வாறு ஈஸ்ட் இயங்குகிறது என்பதும் இந்த ஆய்வில் இடம் பெறும். அப்போதுதான் கொஞ்சம் பீரையும் காய்ச்சி எடுக்கப்போகிறார்கள்!