கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்

தமிழ் பட உலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன.

தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது என்றெல்லாம் இருந்தன.

ஆனால் சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதால் பட உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நயன்தாரா, ஜோதிகா, தமன்னா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்ட சிலரது நடிப்பில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தயாராகி இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் திரைக்கு வர இருக்கின்றன.

இதன்மூலம் தமிழ் பட உலகம் கதாநாயகிகள் ஆதிக்கத்துக்குள் வருகிறது. கதை, கதாபாத்திரம், சந்தைபடுத்துதலில் கதாநாயகர்களுக்கு பெரும் போட்டியாக அவர்கள் மாறி இருக்கிறார்கள்.

36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா, குற்றம் கடிதல் படம் மூலம் பிரபலமான பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும், பாலா இயக்கும் நாச்சியார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை இரண்டுமே கதாநாயகர்கள் இல்லாமல் நாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்கள். நாச்சியார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாரா திரைக்கு வந்து 14 வருடங்கள் ஆகிறது. இதுவரை 58 படங்களில் நடித்து விட்டார். தற்போது கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் உள்ள டோரா, அறம், கொலையுதிர் காலம் உள்பட 6 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். டோரா படவேலைகள் முடிவடைந்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை. பெயரிடப்படாத திரில்லர் படமொன்றில் பத்திரிகையாளராகவும் அவர் நடிக்கிறார்.

திரிஷா சினிமாவில் அறிமுகமாகி 17 வருடங்கள் ஆகிறது. இதுவரை 56 படங்களில் நடித்து விட்டார். தற்போது சதுரங்க வேட்டை-2, மோகினி, கர்ஜனை, 1818 ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மோகினி படப்பிடிப்பு முடிந்து விட்டது. கர்ஜனை படம் இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றிகரமாக ஓடிய என்.எச்.10 படத்தின் தமிழ் பதிப்பு ஆகும். 1818 படம் மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி தயாராகிறது.

தமன்னா 12 வருடங்களில் 51 படங்களில் நடித்து விட்டார். அவர் நடிப்பில் பாகுபலி இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்போடு திரைக்கு வர இருக்கிறது. குயின் உள்பட மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா இதுவரை 45 படங்களில் நடித்து விட்டார். பாகுபலி-2, பாக்மதி உள்பட 4 படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.