சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டில் துவங்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் சில ஆண்டுகளாக மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் ஐஎஃப்ஏ 2017 விழாவில் சாம்சங் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் டீசர் அறிமுகம் அல்லது ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது எதிர்கால சாதனங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த தகவல்களை ஐஎஃப்ஏ விழாவில் அறிவிக்க இருக்கின்றன.
கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெற கொரியாவில் பதிவு செய்திருந்தது. பாதியாக மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி X என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனில் வழக்கமான சாம்சங் ஹோம் பட்டன், மெனு பட்டன் மற்றும் பேக் பட்டன் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.