அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக, ஆக்ரோஷமாகக் கத்தியபடியே துடுப்பாட்ட வீரருக்கு அருகே சென்றார். இதனால் கோபம் கொண்ட துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சாளரைத் தனது தோளால் மோதிக் கீழே தள்ளினார்.
இதைக் கண்ட யக்கன்டன்டா கழகத்தின் மற்றொரு வீரர், குறித்த துடுப்பாட்ட வீரரைத் தாக்கினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக, மற்றொரு வீரருக்கு உடல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்திய துடுப்பாட்ட வீரரும் அவரைத் தாக்கிய எதிரணி வீரரும் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட பந்துவீச்சாளருக்கு நான்கு வாரங்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal