அழகிய வீட்டை, 24 மணி நேரத்திற்குள் கட்ட முடியுமா? ‘அபிஸ் கோர் 3டி’ என்ற வீடு கட்டும் முப்பரிமாண இயந்திரம் இருந்தால் போதும்!
ரஷ்யாவில், ஸ்டுபினோ என்ற இடத்தில், உறைபனிக் காலத்தில், இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, அபிஸ் கோர் நிறுவனம். சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும், அபிஸ் கோர் 3டி இயந்திரம், 360 டிகிரி கோணங்களிலும் சுற்றிச் சுற்றி இயங்கும் திறன் கொண்டது.
ஒரு கிரேன் மூலம், வீட்டுமனையில் கொண்டு போய் இந்த இயந்திரத்தை வைத்து, சிமென்ட் கலவையை குழாய் மூலம் செலுத்த, அந்த இயந்திரத்தில் உள்ள பெரிய சிரிஞ்ச் போன்ற அமைப்பு, வேகமாக சுவர்களை வடிக்க ஆரம்பிக்கிறது.
இதனுடன் இணைந்துள்ள கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன. இடையிடையே கம்பிகள் மற்றும் குளிரிலிருந்து தாக்குப் பிடிக்க உதவும், ‘இன்சுலேஷன்’ பொருட்களையும் 3டி இயந்திரமே வைத்து வீட்டைக் கட்டி முடித்து விடுகிறது.
இதற்கு ஆன செலவு, 6.77 லட்சம் ரூபாய்! வெறும் 38 சதுர மீட்டர் கொண்ட இந்த வீட்டுக்குள் அனைத்து நவீன வசதிகளையும் பொருத்த முடியும்.
இதன் ஆயுள் 50 ஆண்டுகள் என்றும், எளிதில் இடிக்க முடியாத அளவுக்கு உறுதியானது என்றும், அபிஸ் கோர் நிறுவனம் சத்தியம் செய்கிறது. ரஷ்யாவில் முப்பரிமாண இயந்திரம் மூலம் கட்டப்பட்ட முதல் வீடு என்ற பெருமையும், இந்த குட்டி வீட்டுக்கு உண்டு.