இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16) தொடங்குகிறது.
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16-ந்தேதி) தொடங்குகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதனால் ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். புனேயில் ஏற்பட்ட தோல்விக்கு பெங்களூரில் சரியான பதிலடி கொடுத்த விராட் கோலியின் அணியின் அதிரடி ராஞ்சியிலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம், வீரர்களின் உசுப்பேற்றல் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.
இந்த டெஸ்ட் தொடரில் ராகுல், புஜாரா, ரகானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் முத்திரை பதித்து உள்ளனர். ராகுல் 3 அரை சதத்துடன் 215 ரன் எடுத்துள்ளார். புஜாரா பெங்களூர் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 92 ரன் எடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
கப்டன் விராட் கோலி 4 இன்னிங்சிலும் சேர்த்து 40 ரன்களே எடுத்து உள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அவர் இந்த தொடரில் மோசமான நிலையில் உள்ளார். இதில் இருந்து விராட் கோலி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அவுஸ்ரேலிய தொடர் மிகவும் கடினமானது என்பதால் அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் காயத்தால் ஆடாத முரளி விஜய் இடம் பெறுவார். அவருக்கு இது 50-வது போட்டியாகும்.
இந்திய அணியின் சுழற்பந்து வீரர்களான அஸ்வினும் ஜடேஜாவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர். பெங்களூரில் டெஸ்டில் ஜடேஜா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த தொடரில் அஸ்வின் 15 விக்கெட்டும், ஜடேஜா 12 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். ராஞ்சி டெஸ்டிலும் இருவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
வேகப்பந்து வீரர்களில் இஷாந்த் சர்மா இடத்தில் புவனேஸ்வர் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 பேட்ஸ்மேன், 4 பவுலர்களுடன் தான் இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக மிட்செல் மார்ஷ், ஸ்டார்க் விலகியது, அவுஸ்ரேலிய அணிக்கு பாதிப்பே. இதை சரிக்கட்டும் வகையில் விளையாடக் கூடிய திறமை அந்த அணியிடம் உள்ளது.
ஸ்டார்க் இடத்தில் கும்மின்ஸ் இடம் பெறுவார். அவர் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே ஆடி இருக்கிறார். மிட்செல் மார்ஷ் இடத்தில் மேக்ஸ்வெல் அல்லது ஸ்டோனிக்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அவுஸ்ரேலிய அணியின் பேட்டிங்கில் கேப்டன் சுமித், ரென்ஷா நல்ல நிலையில் உள்ளனர். சுமித் ஒரு சதத்துடன் 172 ரன்னும், ரென்ஷா இரண்டு அரை சதத்துடன் 164 ரன்னும் எடுத்து உள்ளனர். டி.ஆர்.எஸ். முறையை தவறாக பயன்படுத்திய விவகாரத்தால் கேப்டன் நெருக்கடியில் இருக்கிறார்.
சுழற்பந்தில் லயனும், ஒகிபேயும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்க கூடியவர்கள். ஒகிபே 15 விக்கெட்டும், லயன் 13 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். மேலும் வேகப்பந்தில் ஹாசல்வுட் முத்திரை பதிக்க கூடியவர்.
இரு அணிகளும் வெற்றி பெற தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் ராஞ்சி டெஸ்ட் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும்.
இன்று டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த டெஸ்ட் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ராஞ்சி டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.