அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹெட்போன் வெடித்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயனர் ஒருவிரன் ஹெட்போன் வெடித்து சிதறிய சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீஜிங்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பேட்டரி மூலம் இயங்கும் ஹெட்போன் நடுவானில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான பயணி ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஹெட்போன் வெடித்த சம்பவம் விமான பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணியின் ஹெட்போன் நடுவானில் வெடித்து சிதறியதில் பெண்மணியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

வெடித்த ஹெட்போனினை கீழே போட்டதும் விமான பணியாட்கள் ஹெட்போன் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தீயினை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

ஹெட்போன் வெடித்ததில் விமானம் முழுக்க பிளாஸ்டிக் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து விமான பயணிகள் இருமலுடன் பயணம் செய்து வந்ததாக விமான பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹெட்போனில் பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியாலேயே ஹெட்போன் வெடித்தது என அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பலமுறை விமானங்களில் மின்சாதனங்கள் வெடித்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகளில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சாதனங்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லித்தியம் அயன் பேட்டரிகளில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.