செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர்.
பூமியில் பேரழிவு ஏற்பட்டால், மனித இனம் பிழைக்க, அருகாமையில் உள்ள செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியைப் போலவே, செவ்வாய்க்கும் காந்தப் புலம் இருந்தது.
இதனால் அங்கு வளி மண்டலம் உருவாகி, தட்ப வெப்ப நிலை பதப்பட்டு, ஆறு, கடல் போன்றவை இருந்தன. ஆனால், காலப் போக்கில் செவ்வாயின் காந்தப் புலம் பலவீனமடைந்ததால், பருவநிலை மாறி, வறட்சி ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
காந்தப் புலத்தின் பாதுகாப்பு இருந்தால் தான், பிரபஞ்சக் கதிர்வீச்சிலிருந்தும் அங்கு குடியேறும் மனிதர்கள் தப்பிக்க முடியும். நாசா மட்டுமல்ல, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி அமைப்புகளும் செவ்வாயில் மனித காலனிகளை அமைக்க முயன்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.