தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனின் படுகொலை வழங்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மார்ச் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த படுகொலைச் சதியுடன் தொடர்புடைய கண்ணன் அல்லது அனோஜன் அல்லது வெற்றி என அழைக்கப்படும் சந்தேக நபர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் அவரைக் கைதுசெய்வதற்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்துஇ கண்ணன் அல்லது அனோஜன் அல்லது வெற்றி என்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்கான அனைத்துலக பிடியாணை உத்தரவை கிளிநோச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பிறப்பித்துள்ளார்.