அண்ணா இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதே!

அவுஸ்ரேலியாவில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாத குழந்தைக்கு 3 வயதேயான அதன் சகோதரர் ஆதரவாக பேசிய பேச்சு அந்த குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஷெரைல் மற்றும் ஜோன் தம்பதிகள். இவர்களுக்கு வில்லியம்(3) மற்றும் தாமஸ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் 4 மாதங்களேயான தாமஸ் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும்பாலான நேரம் குழந்தை தாமசுடன் குடும்பத்தினர் அனைவரும் செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு குழந்தையுடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர் ஷெரைல் மற்றும் ஜோன்.

அப்போது குழந்தை தாமஸ் அருகே படுத்திருந்த வில்லியம், “அண்ணன் இருக்கேன், எதுக்கும் கவலைப்படாதே, எல்லாம் சரியாகிவிடும்” என உருக்கமாக கூறியதை ஷெரைல் மறைந்திருந்து காணொளியாக பதிவு செய்துள்ளார்.

தமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மை விட்டு பிரிய நேரிட்டால் அதை தாங்கிக்கொள்ள நம்மால் முடியாது. ஆனால் 3 வயதேயான வில்லியம் எப்படி இந்த துயரத்தை தாங்குவான் என நினைத்தாலே அழுகை பீறிடுகிறது என ஷெரைல் தமது மகன் வில்லியம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

குழந்தை தாமஸ் மிகவும் அரிதான ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பு வெறும் 30 விழுக்காடே உள்ள நிலையில், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாக ஷெரைல் மற்றும் ஜோன் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.