கணினி நிறுவனமான, ஐ.பி.எம்., சமீபத்தில் ‘குவாண்டம்’ ரக கணினி சேவையை, ஐ.பி.எம்.-க்யூ., என்ற பெயரில், கடந்த வாரம் அறிவித்து உள்ளது.தற்போதுள்ள கணினிகளால், கையாள முடியாத அளவுக்கு, ஏராளமான தகவல்களை, பல லட்சம் மடங்கு கையாள்வதோடு, பல்லாயிரம் மடங்கு வேகத்திலும் கையாளும் திறன் கொண்டவை, குவாண்டம் கணினிகள்.கடந்த சில மாதங்களாக, ‘குவாண்டம் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற சேவையை, இணையம் மூலம் பல நிறுவனங்களுக்கு அளித்து, குவாண்டம் கணினி மூலம், சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது ஐ.பி.எம். விரைவில், வர்த்தக ரீதியில் குவாண்டம் கணினிகளை தயாரித்து விற்கவிருப்பதால், இவற்றுக்கு ஏற்ற மென்பொருட்களை எழுத வருமாறு வெளி நிறுவனங்களுக்கு, ஐ.பி.எம்., அழைப்பு விடுத்துள்ளது.
வழக்கமான கணினிகளில் தகவல்கள், ‘பிட்’ எனப்படும், 1 மற்றும் 0 ஆகியவற்றைக் கொண்டு இயங்குகின்றன. ஆனால், குவாண்டம் கணினி, ‘க்யூபிட்’ என்ற அலகின் மூலம் இயங்குகிறது. அதாவது, மின்னணுக்கள் எப்போதும், 1 அல்லது 0 ஆகிய ஏதாவது ஒரு நிலையில் தான் இருக்கும்.
ஆனால், குவாண்டம் கணினி சில்லுகளில் மின்னணுக்கள் ஒரே நேரத்தில், இரு நிலைகளிலும் இருக்க வல்லவை.
இது கணினியின் தகவல் அலசும் திறனை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரிக்கும். குவாண்டம் கணினிகள் பருவநிலை, அணுத்துகள், மருத்துவம், வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் அதிவேக தகவல் அலசலுக்கு பயன்படும்.