வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கின்ற மக்களுடைய காணிகளை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களின் ஒன்றிணைந்த அமைப்பு, 27 வருட துன்பங்களை இந்த அரசாங்கமாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பினை மேற்படி குழுவின் தலைவர் விஜயரட்ணம் ரட்னராஜா, செயலாளர் கந்தையா பாலசுப்ரமணியம் ஆகியோர் உட்பட குழுவின் அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர். மேற்படி ஐந்து கிராம மக்களும் 27 வருடங்களாக தமது சொந்த நிலங்களை பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். எமது காணிகள் தற்போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அவர்களுடைய பாவனை க்குள்ளும் இருக்கின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் எமது மக்கள் வாடகை வீடுகளிலும், அகதி முகாம்களிலும் தான் தங்கியுள்ளனர். சொந்த காணியும் வீடும் இருக்க அகதி வாழ்வில் இருக்கும் எமது அவல நிலையை எல்லோராலும் புரிந்து கொள்ள
முடியாது.
காங்கேசன்துறையில் பல இடங்கள் விடுவிக்கபட்டதாக அரசாங்கம் கூறுகின்றது என்றாலும், அங்குள்ள எத்தனையோ வீடுகள், மற்றும் கட்டடங்கள், அடிப்படை வசதி கொண்ட கிணறுகள் இடித்து அழிக்கப்பட்டு கொண்டுள்ளன. இவ்வாறு தான் ஏனைய இடங்களின் நிலைகளும் உள்ளன. அரசாங்கம் எமது இடங்களை இடித்து அளித்து விட்டு உடனடியாக மீள குடியேற வேண்டும் என்றால் நாங்கள் எவ்வாறு உடனடியாக குடியேறுவது?
எந்த வசதியும் இந்த அரசாங்கத்தினால் செய்து தரப்படவில்லை. இராணுவம் இந்தளவு காலமும் எமது வீடுகளில் காணிகளில் குடியிருந்தமைக்கு எந்த நஷ்ட ஈடும் எமக்கு வழங்கவில்லை. முப்பது வருடங்களுக்கு மேல் தமது காணிகளை பார்வையிட முடியாத நிலையில் எமது மக்கள் உள்ளனர். நல்லாட்சி என்று கூறுபவர்கள் இனியாவது இந்த இடங்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இடம்பெயர்வுக்கு முன்னர் எமது கிராமங்களில் இருந்து ஒரு நாளைக்கு ஆறு இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.
அந்த மக்கள் இந்த வருமானத்தை இழந்து கொண்டுள்ளார்கள். அந்த மக்களுடைய துறைமுகங்கள், விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் இந்த வருமானத்தை தமது சொந்த முயற்சியால் ஈட்டுவார்கள். ஆனால் தற்போது தமது நாளாந்த வாழ்வுக்கே அந்த மக்கள் வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எமது கிராம மக்களுடைய இந்த கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சமர்ப்பிக்க உள்ளோம்.
இந்த கிராமங்களும் ஒவ்வொரு இராணுவ முகாம்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. முன்னால் முப்படை தளபதிகளாக இருந்தவர்களை கேளுங்கள் இந்த மக்கள் இரானுவத்திற்கு ஏதும் துன்பம் செய்தார்களா? என ஒரு துன்பமும் செய்யாத நிலையில் எமது மக்களை இராணுவம் கண்காணித்து கொண்டுள்ளது. கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் ஒன்றை நடாத்தி தமது காணிகளை மீள பெறுவதில் வெற்றியும் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் தான் எமது மக்கள் விரக்தியின் விழும்பில் இருக்கின்றார்கள். ஒரு மாத காலத்திற்குள் எமது காணிகளை விடுவித்து இராணுவம் வெளியேறாவிட்டால் நாம் தொடர் சாத்வீக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ஆகவே எமது இந்த கோரிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் செவிமடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும், ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்ற ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
அந்த செயற்திட்டம் யாருக்காக முன்னெடுக்கப்பட்டது என்று எமக்கு தெரியவில்லை. எமது குறைகளை ஜனாதிபதி கண்டுகொள்ள மாட்டாரா? எமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்று கூறும் செயர்த்திட்டத்திலும் சமர்ப்பிக்க உள்ளோம். அதனை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து செயற்பட வேணும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal