கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கையால் வரையப்பட்ட மெல்பேர்ன் வரைபடத்தை வெளியிட்ட பெண் தற்போது மெல்பேர்னின் புதிய வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Melinda Clarke என்ற பெண் உலக சுற்றுப்பயணம் சென்று பல இடங்களின் வரைபடங்களைப் பார்த்தபோது மெல்பேர்னுக்கு இப்படியான வரைபடம் இல்லையே என யோசித்ததன் விளைவாக 1980களில் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட வரைபடம் உருவாகியிருந்தது.

Deborah Young  என்ற ஓவியரின் துணையுடன் Hot air பலூனில் மெல்பேர்ன் முழுவதும் பறந்து 7,500 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து மெல்பேர்ன் வரைபடத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் தற்போது புதிய வரைபடமொன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாக Melinda Clarke தெரிவித்துள்ளார்.

Google-ஐ மட்டும் நம்பியிராமல் மெல்பேர்னின் ஒவ்வொரு வீதிக்கும் நேரடியாகச் சென்று இந்த வரைபடம் உருவாக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான நிதிசேகரிப்பு ஒன்றிலும் ஈடுபட்டுள்ள Melinda Clarke, இவ்வருட இறுதிக்குள் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட புதிய வரைபடத்தை வெளியிட தீர்மானித்துள்ளார்.