நடிகைகள் தற்காப்பு கலை பயில வேண்டும்: தன்ஷிகா

நடிகை தன்ஷிகா பிரபல சண்டை இயக்குனர் பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலை பயின்றவர். சிலம்பமும் கற்றுக் கொண்டவர். தற்போது அவர் நடித்துள்ள விழித்திரு படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இதையட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:

விழித்திரு படம் ஒரு இரவில் நடக்கும் கதை. இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. எல்லோருமே கதை மாந்தர்கள்தான். படத்தில் நான்கு கதைகள் அதில் நான் வரும் கதையும் ஒன்று. என் கதையில் தம்பிராமய்யாவும், விதார்த்தும் உள்ளனர். டி.ராஜேந்தரின் ரசிகையாக நடித்திருக்கிறேன்.

அவருடன் ஆடியும் இருக்கிறேன். நடிகை பாவன்னாவுக்கு நடந்த கொடுமை பற்றி கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த நேரத்தில் அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருதற்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்வதுதான் காரணம். அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதாவது அரபு நாடுகள் போன்ற தண்டனை வேண்டும்.

நடிகைகள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் அவர்கள் தற்காப்பு கலை படிக்கலாம். குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களை உடன் வைத்துக் கொள்ளலாம். தற்காப்பு கலை மிகவும் நல்லது.

நான் அதை படித்திருக்கிறேன். படப்பிடிப்பில் மது அருந்திவிட்டு வந்து கலாட்டா செய்தவர்களை அடித்து உதைத்து விரட்டியிருக்கிறேன். பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி மையம் ஒன்றை விரைவில் தொடங்கலாம் என்ற நினைத்திருக்கிறேன் என்றார் தன்ஷிகா.